பாதியாக குறையுமா Jio, Airtel, Vodafone ரீசார்ஜ் விலைகள்? பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வரும் டிராய்!
இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் (Indian Telecom Market) ஒரு பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது - வாய்ஸ் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தும் (Pay Only For Voice Calls) நடைமுறை மீண்டும் கொண்டு வரப்படும் என்பது போல் தெரிகிறது!
டெலிகாம்டால்க் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டீபால்ட் (Default) ஆகவே, அதாவது இயல்பாகவே மொபைல் டேட்டாவை உள்ளடக்காத திட்டங்களை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை பயனர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக, ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரே திசையில் நகர்ந்து வருகின்றன; ஒவ்வொரு ரீசார்ஜிலும் டேட்டாவே மையமாக மாறி உள்ளது. அதனுடன் வாய்ஸ் கால்களும் இயல்பாகவே சேர்ந்துவிட்டன. ஒரு பயனருக்கு தினசரி டேட்டா தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அது அந்த தொகுப்பின் ஒரு பகுதியாகிவிட்டது. இந்த மாற்றம் பெரும்பாலான பயனர்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் அனைவருக்கும் அல்ல!
இன்னும் லட்சக்கணக்கானோர் தங்கள் மொபைல் போன்களை "முக்கியமாக" கால் செய்வதற்காகவே பயன்படுத்துகின்றனர். அவர்களை பொறுத்தவரை, காலப்போக்கில் ரீசார்ஜ்கள் மெதுவாக விலை உயர்ந்ததாகிவிட்டன; அவர்கள் அதிகமாக பேசுவதால் அல்ல, மாறாக அவர்கள் உண்மையில் பயன்படுத்தாத டேட்டாவிற்கு பணம் செலுத்துவதால்தான். இது ஒரே இரவில் நடக்கவில்லை!
முன்னதாக, வாய்ஸ் பேக்குகளும் டேட்டா பேக்குகளும் தனித்தனியாக இருந்தன, மேலும் பயனர்கள் காலப்போக்கில் தங்களுக்கு தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே திட்டத்தில் இணைக்க தொடங்கிய போதே இந்த சிக்கல் ஆரம்பமானது. இதன் பின்னணியில் இருந்த டெலிகாம் நிறுவனங்களின் தந்திரம் எளிமையானது: அதிக டேட்டா பயன்பாடு என்பது பயனர்களின் அதிக ஈடுபாட்டையும், இறுதியில் அவர்களுக்கு சிறந்த வருவாயையும் அளிக்கும்!
ஸ்மார்ட்போன்கள் பரவலானதாலும், வீடியோ நுகர்வு அதிகரித்ததாலும், ஒருங்கிணைந்த (டேட்டா + வாய்ஸ் + எஸ்எம்எஸ்) திட்டங்கள் மிகவும் இயல்பானதாக மாறின. இன்று, டேட்டாவை உள்ளடக்காத ஒரு மெயின் ரீசார்ஜை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மிகவும் அடிப்படையான ப்ரீபெய்ட் திட்டங்கள் கூட தினசரி டேட்டா ஒதுக்கீட்டுடன் வருகின்றன.
டிராய் இப்போது சரிசெய்ய முயற்சிப்பது - வழங்கப்படும் சேவைகளுக்கும், சில பயனர்களுக்கு உண்மையில் தேவைப்படுவதற்கும் இடையிலான இந்த பொருத்தமின்மையை தான். வாய்ஸ்-ஒன்லி திட்டம் ஒரு பெரிய மாற்றமாக தோன்றாமல் இருக்கலாம், ஆனால் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்-ஐ நம்பியிருக்கும் பயனர்களுக்கு, இது ஓரளவிற்கு கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வரக்கூடும்.
அதிக விலைக்கு அனைத்து நண்மைகளையும் ஒருங்கிணைக்கும் ரீசார்ஜ்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இது குறிப்பாக மூத்த குடிமக்கள், சிறிய நகரங்களில் உள்ள பயனர்கள் மற்றும் தங்கள் இணைய தேவைகளில் பெரும்பாலானவற்றிற்கு வைஃபையை நம்பியிருக்கும் நகர்ப்புற பயனர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இவர்களுக்கு - மொபைல் டேட்டா பெரும்பாலும் இரண்டாம் பட்சமானது, அத்தியாவசியமானது அல்ல!
இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும்? ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea - Vi) போன்ற நிறுவனங்கள் தங்கள் டேட்டா பயன்பாட்டை மையமாக கொண்டு விலை நிர்ணயம் செய்துள்ளதால், எதிர்ப்பு இல்லாமல் இதை விரைவாக செய்து முடிப்பது சாத்தியமில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, டேட்டா பயன்பாடு ஆனது மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் வருவாய் அளவீடுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மலிவான வாய்ஸ்-ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்துவது அந்த சமநிலையைக் குலைக்கக்கூடும். கணிசமான எண்ணிக்கையிலான பயனர்கள் குறைந்த விலை விருப்பங்களுக்கு மாறினால், அது டெலிகாம் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயைப் பாதிக்கக்கூடும்.
அதனால்தான், அத்தகைய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை விட, அவற்றின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. ஆக வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் மீண்டும் வந்தாலும், பலர் எதிர்பார்ப்பது போல் அவை மலிவானதாக இருக்க வாய்ப்பில்லை; ஆனால் நிச்சயமாக இப்போது செய்யும் செலவின் அளவுகளில் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்
ஒருவேளை உண்மையிலேயே மிகவும் மலிவான விலைகளுக்கு வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் வந்தால் - தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அந்த திட்டங்களில் சில வரம்புகளை விதிக்கலாம். அதாவது குறுகிய கால சர்வீஸ் வேலிடிட்டி, குறைவான கூடுதல் சேவைகள், அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பலன்கள் போன்றவை வரம்புகளை வைக்கலாம்.
தற்போதைக்கு, இந்திய டெலிகாம் சந்தையில் "இதற்கான" உடனடி மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் டிராய் இந்த யோசனையை மீண்டும் பரிசீலிப்பது, ஏதோவொரு ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. பயனர்கள் தாங்கள் உண்மையில் பயன்படுத்துவதற்கு பணம் செலுத்த வேண்டுமா, அல்லது சந்தை தரப்படுத்தியதற்கு பணம் செலுத்த வேண்டுமா? என்கிற கேள்வியை மீண்டும் தூசி தட்டுகிறது. பார்க்கலாம், என்ன நடக்குமென்று!


Click it and Unblock the Notifications








