ஊர தெரிஞ்சுகிட்டேன்.. உலகம் புரிஞ்சுகிட்டேன்.. ஒப்பாரி வைக்காத குறையாக Airtel.. BSNL-ன் காந்த சக்தி!
அம்பானி சரி அடுத்தது நீங்க தான் - என்று தைரியமாக கூறும்படியான ஒரு சாதனையை செய்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், புதிய மொபைல் வாடிக்கையாளர் சேர்க்கையில் பாரதி ஏர்டெல்லை (Airtel) முந்தியுள்ளது
அதுவும் சாதாரணமாக இல்லை. ஏர்டெல் நிறுவனத்தை விட 3 மடங்கு அதிக எண்ணிக்கையிலான புதிய கஸ்டமர்களை சேர்த்துள்ளது. இது கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்திராத சாதனை ஆகும். ஆனாலும் கூட முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட, 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான தரவுகளின் படி, அதிக எண்ணிக்கையிலான புதிய கஸ்டமர்களை சேர்த்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஜியோ முதல் இடத்தையும், பிஎஸ்என்எல் இரண்டாவது இடத்தையும், ஏர்டெல் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 2025 இல் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளன?
1. ரிலையன்ஸ் ஜியோ - 19 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது
2. பிஎஸ்என்எல் - 13.85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது
3. பார்தி ஏர்டெல் - 4.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ந்துள்ளது
இதன் மூலம் கடந்த ஜூலை மாதத்தில் 122 கோடியாக இருந்த நாட்டின் மொத்த மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 122.45 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் பிரிவில் 35.19 லட்சம் வாடிக்கையாளர்களின் நிகர சேர்க்கையால் இந்த வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இன்னொரு தனியார் டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் நிலைமை இம்முறையும் மோசமாகவே உள்ளது. இது கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் 3.08 லட்சம் நிகர மொபைல் சந்தாதாரர்கள் (Net mobile subscribers) சரிவை கண்டதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்து உள்ளது
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்த நேரத்தில் 3ஜி சேவைகளை மட்டுமே வழங்கிய போதிலும், 2024 செப்டம்பரில் அனைத்து ஆபரேட்டர்களிலும் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் சேர்த்திருந்தது. அதன் நீட்சியாக ஆகஸ்ட் 2025-இலும் நல்ல எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
பிராட்பேண்ட் பிரிவை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் (மொபைல் மற்றும் நிலையான இணைப்பு இணைப்புகள்) முன்னிலை வகித்து வருகிறது. அதைத் தொடர்ந்து பாரதி ஏர்டெல் (30.9 கோடி), வோடபோன் ஐடியா (12.7 கோடி), பிஎஸ்என்எல் (3.43 கோடி) மற்றும் ஏட்ரியா கன்வெர்ஜென்ஸ் (23.5 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
சமீபத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு தழுவிய அளவில் தனது 4ஜி சேவை (BSNL PAN-India 4G Service) மற்றும் இசிம் சேவையை (eSIM Service) அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக வரும் மாதங்களில், பிஎஸ்என்எல் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதோடு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் வைஃபை காலிங் (BSNL Wi-Fi Calling) சேவைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. வைஃபை காலிங் சேவையானது வோவைஃபை காலிங் (BSNL VoWi-Fi Calling) என்றும் அழைக்கப்படுகிறது.
வாய்ஸ் ஓவர் வை-ஃபை காலிங் (Voice over Wi-Fi Calling) என்கிற இந்த சேவையையோ தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்த சேவையை வழங்கி வருகின்றன, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட இந்த போட்டியில் இணைந்துள்ளது. சுருக்கமாக இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் "கை" மெல்ல மெல்ல ஓங்குகிறது!


Click it and Unblock the Notifications








