ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றம்! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு.. வாடிக்கையாளர்கள் உற்சாகம்!
டிராய் (TRAI) அமைப்பு டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது குறுகிய காலத்திற்குச் செல்லுபடியாகும் குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மட்டும் அடங்கிய திட்டங்களை கட்டாயம் வழங்கவேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதுவும் ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் இந்த உத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே வாடிக்கையாளர்களுக்கு அதிகம் வழங்கி வருகின்றன. இதனால், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத சாதாரண மொபைல் போன் வாடிக்கையாளர்களும் இந்த திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இணையதள வசதி தேவையில்லாத பயனர்கள் கூட அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் செலவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான 13வது திருத்த ஒழுங்குமுறை, 2026-ன் அடிப்படையில் டிராய் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள வசதி இல்லாமல் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே இடம்பெறும் ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும்.
குரல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையதள வசதியுடன் வழங்கப்படும் 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு இணையாக, இணையதள வசதியற்ற திட்டங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதன் மூலம், இணையதள சேவை தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்குத் தேவையான குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் கொண்ட குறுகிய கால ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் இந்த ரீசார்ஜ் திட்டம் இருக்க வேண்டும். அதேசமயம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அந்த தேதி இல்லையெனில், அந்த மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்தல் நடக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறிப்பாக டேட்டா எனப்படும் இணையதள வசதி நீக்கப்படுவதால், இந்த புதிய குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டண திட்டம் ஆனது டேட்டாவுடன் கூடிய வழக்கமான திட்டங்களை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவும், மலிவாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக டிராய் அதிகாரிகள் கூறுகையில், புதிய கட்டண முறையானது வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இணையதள வசதி தேவையில்லாதவர்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்தி வருபவர்கள் இந்த புதிய கட்டணத் திட்டத்தின் மூலம் அதிக பயன் பெறுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
டிராய் கொண்டுவந்துள்ள இந்த புதிய நடவடிக்கை மூலம் இணையதள சேவை தேவையில்லாத வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் குறைந்த கட்டணத்தில் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய நடைமுறை கூடுதல் செலவைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
