ஏப்ரல் 14 வரை கெடு.. ரிலையன்ஸ் ஜியோவுக்கு TRAI முக்கிய உத்தரவு.. என்ன நடந்தது? இதோ விவரம்..
இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஜியோ (jio) நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டிராய் (Trai) அமைப்பு ஜியோ நிறுவனத்திற்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
தற்போது Business Standard இணையதளத்தில் வெளியான தகவலின்படி, குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளிப்படைத் தன்மை விதிமுறைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் டிராய் அமைப்பு கண்டறிந்துள்ளது. எனவே இதை மாற்றி அமைக்கும்படி அமைக்கும்படி தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதுவும் வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் இதனை முடிக்க வேண்டும் என்று டிராய் அமைப்பு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அனைத்து தளங்களிலும் கட்டணத் திட்டங்கள் சீராக வெளியிடப்படுவது உறுதி செய்வது மற்றும் டிவைஸ் எனப்படும் சாதனம் சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்குதல் என இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறது டிராய் அமைப்பு. ஆனால் ஜியோ நிறுவனம் இதற்குப் பதில் அளித்து உள்ளது. அதாவது ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் தங்களது நிறுவனம் முறையாகப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்து இருக்கிறது. அதேபோல் தங்களது ரீசார்ஜ் திட்டங்கள் பாகுபாடு காட்டுவதாகக் கருதிவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா தரும் எண்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரென நிறுத்தியது. ஆனால் சில குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்கள் ரீடைல் ஸ்டோர்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து டிராய் தரப்பில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.249, ரூ.199 மதிப்பு கொண்ட ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்கள் ஜியோ ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்பு ஒரு குறிப்பிட்ட திட்டங்களைக் குறிப்பிட்ட வழியாக மட்டுமே பெற வேண்டும் என்பது வெளிப்படைத் தன்மை அற்றது, பாகுபாடு கொண்டது என டிராய் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பிளாட்பார்ம்களிலும் அதாவது சில்லறை விற்பனை நிலையங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்கள் அணுகக் கூடிய வகையில் தான் ரீசார்ஜ் கட்டணங்களும் திட்டங்களும் இருக்க வேண்டும் என டிராய் அமைப்பு கூறியுள்ளது.

இதுதவிர ஜியோ பாரத், ஜியோ போன்களுக்கு என பிரத்தியேக ரீசார்ஜ் திட்டங்களை அறிவிப்பது பாகுபாடு கொண்டது என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து பிளாட்பார்ம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான ரீசார்ஜ் திட்டங்களை அணுகும் வாய்ப்பை தர வேண்டும் என்று தொலை தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஜியோ நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், சில குறிப்பிட்ட முதல் முறை ரீசார்ஜ் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாது. அது கடைகள் வழியாக மட்டுமே கிடைக்கும் எனவும், சில குறிப்பிட்ட சாதனங்கள் அடிப்படையிலான திட்டங்கள் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு என்று வடிவமைக்கப்பட்டது என்பதால் இது பாகுபாடு என்ற பிரிவில் வராது என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








