உங்கள் வாகனத்துக்கு ஃபைன் வந்திருக்கா.. அவசரப்பட்டு பணம் கட்டாதீங்க.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
பொதுமக்கள் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், எளிதாக ஏமாற்றக்கூடிய புதிய வழிகளை ஏமாற்றுக்காரர்கள் தொடர்ந்து புதிது புதிதாக கண்டுபிடித்துத் தான் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வாகன ஓட்டிகளைக் குறிவைத்து ஒரு புதிய வகை சைபர் மோசடி (Cyber Fraud) பரவி வருகிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது உங்கள் மொபைல் போனுக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே கட்டுங்கள் என்று ஒரு மெசேஜ் (எஸ்எம்எஸ்) வந்தால் அவசரப்பட்டு அதில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அது உங்கள் வங்கி கணக்கை சில நிமிடங்களில் காலி செய்வதற்கான ஒரு பொறியாக இருக்கலாம்.

சில மோசடி கும்பல்கள் அரசு இணையதளமான பரிவாஹன் (Parivahan) போன்று தோற்றமளிக்கும் போலியான இணையதளங்களை உருவாக்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக உங்களுக்கு வரும் மெசேஜில் உள்ள லிங்க் பார்க்கும்போது உண்மையானது போன்ற இருக்கும். உதாரணமாக Prairvahsan எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் உற்றுப் பார்த்தால் மட்டுமே அந்த எழுத்துப் பிழைகள் தெரியும். அதாவது நாம் அவசரத்தில் அதை கவனிக்காமல் கிளிக் செய்துவிடுவோம் என்று நம்பி தான் இது போன்ற போலி லிங்குகளை அனுப்புகின்றனர்.
அதுவும் இந்த போலி லிங்கை கிளிக் செய்தவுடன், அது உங்களை ஒரு இணையப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு அபராதம் போல நடித்து உங்கள் தனிப்பட்ட வாங்கி விவரங்கள், லாகின் ஐடி, பாஸ்ட்வேர்ட், கிரெடிட் கார்டு தகவல்களை எளிதாகத் திருடிவிடுவார்கள். அதேபோல் அவர்கள் அனுப்பும் அந்த போலி லிங்குகள் மூலம் உங்களது போனில் மால்வேர் தாக்கும் ஆபத்தும் உள்ளது. சரி இப்போது இது போன்ற போலி லிங்குகளை தொடாமல் உஷாராக இருப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
1.தெரியாத மொபைல் எண்ணில் இருந்து வரும் மிரட்டல் தோணியிலான மெசேஜ்களில் உள்ள லிங்குகளைத் தொடாதீர்கள்.
2.உங்களுக்கு உண்மையிலேயே அபராதம் இருக்கிறதா என்று சந்தேகம் வந்தால், அந்த லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாக கூகுளில் Parivahan அல்லது உங்கள் மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் வண்டி எண்ணைப் போட்டு சோதித்துப் பாருங்கள்.
3.ஒருவேளை மோசடி மெசேஜ்கள் வந்தால் உடனே அந்த எண்ணை யோசிக்காமல் பிளாக் (Block) செய்துவிட்டு, சைபர் கிரைம் பிரிவில் புகார் தருவது நல்லது.

குறிப்பாக போக்குவரத்து போலீஸ் அல்லது அரசுத் துறை ஒருபோதும் தனிப்பட்ட மொபைல் எண்களில் இருந்து அவசரமாகப் பணம் கட்டச் சொல்லி லிங்க் அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் சிறு கவனக்குறைவு பெரும் பணம் இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற போலி லிங்க் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒருவேளை இதுபோன்ற ஏதாவது ஒரு மோசடி நடந்தால் cybercrime.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கலாம். குறிப்பாக உங்கள் போனுக்கு வரும் தேவையில்லாத எஸ்எம்எஸ் (மெசேஜ்) அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகள் அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.


Click it and Unblock the Notifications








