டெக் உலகை மிரள வைத்த கூகுள்.. மனிதனின் கற்பனையை திரையில் கொண்டுவரும் Veo 3.. வேற லெவல்..
கூகுள் (google) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏஐ சார்ந்த புதிய தொழில்நுட்ப அம்சங்களை அதிகமாக அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டுகிறது கூகுள். கடந்த மே மாதம் வருடாந்திர டெவலப்பர் மாநாடு I/O 2025 நடைபெற்றது. இந்நிகழ்வில் கூகுள் வியோ 3 (Veo 3) அறிமுகம் செய்யப்பட்டது.
Veo 3
இந்த Veo 3 ஆனது உண்மையிலேயே ஒரு அற்புதமான ஏஐ வீடியோ ஜெனரேட்டர் என்று சொல்லலாம். அதாவது இது உரை (text prompts) அல்லது படங்கள் (image prompts) மூலமாக உயர்தரமான வீடியோக்களை உருவாக்குகிறது. அதுவும் கூகுள் டீப்மைண்ட்-இன் (Google DeepMind) புது முயற்சி தான் இது.

இதற்கு முன்பு வந்த Veo மற்றும் Veo 2 மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த Veo 3 வெளிவந்துள்ளது. அதுவும் Veo 3 -ல் உரையாகவும் படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜமான உலகில் உள்ள இயற்பியலுடனும், சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடன் கூடிய வீடியோவை உருவாக்கி கொடுக்கப்படும் என்பது தான் சிறப்பு.
கடந்த மே மாதம் இந்த Veo 3 அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 வினாடிகள் வரை 4k தரத்தில் வீடியோக்களை உருவாக்க முடிந்தது. அதுவும் ஒலி, உரையாடல்கள், மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் உட்பட சினிமா ஸ்டைல்களில் வீடியோக்களை உருவாக்க முடிந்ததாகப் பலர் தெரிவித்தனர்.
நிஜமாகத் தெரியும் காட்சிகள் முதல் அனிமேஷன், கற்பனை போன்ற அனைத்தையும் இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும். குறிப்பாக இந்த ஏஐ மாடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் நிஜ வீடியோகளைப் போலவே இருப்பதாகவும், வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
உதாரணமாக நீங்கள் ஒரு குரங்கு மனிதர்களுடன் நடனம் ஆடும் வீடியோவை இதில் உருவாக்க சொன்னால், இது குரங்கின் நடன அசைவுகள், அதற்குத் தகுந்த லைட்டிங், மனிதர்களின் எதார்த்தமான ரியாக்ஷன்ஸ் என அனைத்தையும் நம்பமுடியாத அளவுக்கு தத்ரூபமாக உருவாக்கிக் கொடுக்கிறது என்பது தான் சிறப்பு.
அதேபோல் Veo 3 மாடலின் முக்கிய சிறப்பு என்னவென்றால், வீடியோ மட்டுமின்றி ஒலியையும் சேர்த்து கொடுக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் உரையாடல்கள் சுற்றுப்புற சத்தங்கள் (உதாரணமா பறவைகள் சத்தம், தெரு சத்தம்) மற்றும் இசை எல்லாமே இதில் இருக்கிறது. குறிப்பாக மனிதர்களில் லிப் சிங்க் துல்லியமாக இருக்கிறது. அதாவது கதாபாத்திரங்கள் பேசுவதற்குத் தகுந்த வாய் அசைவுகள் சரியாக இருக்கிறது.
கடந்த 2024-ம் ஆண்டு அறிமுகமான Veo 2 ஆனது 4கே தரத்தில் வீடியோக்களை உருவாக்கி OpenAI-க்கு சொந்தமானSora Turbo, Meta MovieGen மற்றும் Kling v1.5 மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியை கொடுத்தது. ஆனால் தற்போது வந்துள்ள Veo 3 ஆனது ஆடியோ இணைத்து ஒரு புதிய உயரத்துக்குச் சென்றுள்ளது என்றே கூறலாம்.
விலை?
ஆனால் இந்த Veo 3 வசதியைப் பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த அப்டேட் இன்னும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்காவில் கூகுள் ஜெமினி செயலியில் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே Veo 3 கிடைப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களை உருவாக்க இந்த Veo 3 பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் Google DeepMind-இன் SynthID டிஜிட்டல் வாட்டர்மார்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று அடையாளப்படுத்தி, டீப்ஃபேக்ஸ் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க உதவுகிறது.
Veo 3 முக்கிய நன்மைகள்: ப்ரொஃபெஷனல் தரத்தில் வீடியோக்களை Veo 3 கொடுக்கிறது. எனவே இது ஃபில்ம்மேக்கர்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் சினிமா எடுக்க உதவலாம். அதேபோல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் இதைப் பயன்படுத்தி விளம்பர வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் Veo 3 பயன்படுத்தலாம். அதாவது Veo 3 பயன்படுத்தி அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கி மாணவர்களுக்கு சில சிக்கலான கான்செப்ட்களை விளக்க முடியும். உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் பிதாகரஸ் தியரம் வீடியோ ஒன்று மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது. இதுதவிர கேமிங், என்டர்டெயின்மென்ட், சோஷியல் மீடியா போன்ற தளங்களுக்குத் தகுந்த வீடியோக்களை இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும்.

Veo 3 சிக்கல்கள்: ஏஐ வீடியோக்கள் தவறான தகவல்களைப் பரப்ப பயன்படுத்தப்படலாம். ஆனாலும் கூகுள் SynthID வாட்டர்மார்க் மற்றும் கண்டென்ட் ஃபில்டர்கள் மூலம் இதை தடுக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த Veo 3 வருவதன் மூலம் வீடியோ எடிட்டிங், டப்பிங், ஆக்டிங் துறைகளில் வேலைவாய்ப்பு பாதிக்கலாம்.
இருந்தபோதிலும் Veo 3 ஆனது AI தொழில்நுட்பத்தின் ஒரு மைல்கல். குறிப்பாக இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications