அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?
இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே - பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது போன்றவைகளின் வழியாக மறைமுக விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வரும் மாதங்களில் தத்தம் மொபைல் டேட்டா திட்டங்களின் விலைகளை சுமார் 10% அதிகரிக்கக்கூடும் (tariff hike) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் - டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர்.
கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும்.
இது செயல்படுத்தப்பட்டால், 2024 க்கு பிறகு, டெலிகாம் சந்தைக்கு வரும் முதல் நேரடி விலை உயர்வாக இது இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்களானது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், மறு மதிப்பீடு செய்யும் நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய மாதங்களில், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே தங்கள் என்ட்ரி லெவல் 1ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை படிப்படியாக நீக்கி, பயனர்களை அதிக விலையுள்ள / மதிப்புள்ள திட்டங்களை நோக்கி நகர்த்தின. பெரும்பாலான ப்ரீபெய்ட் டேட்டா பயனர்களுக்கான புதிய பேஸிக் ரீசார்ஜ் இப்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவில் தொடங்குகிறது; மற்றும் விலை ரூ.299 முதல் தொடங்குகின்றன.
இது முன்னதாக ரூ.249 ஆக இருந்ததது. அதோடு ரூ.299-ஐ ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 17% அதிகமாகும். ஆக மறுபடியும் ஒரு 10% விலை உயர்வு அறிவிக்கப்பட்டால் ரூ.299 திட்டத்தின் விலை ஆனது ரூ.30 வரை விலை உயர்த்தப்படலாம். அதாவது ரூ.329 ஆக விலை அதிகரிப்பை பெறலாம். இதேபோல ரூ.349 ஆனது ரூ.384 ஆகவும் விலை உயர்த்தப்படலாம்.
தொலைத்தொடர்பு செயல்பாடுகளின் மூலதன-தீவிர தன்மை (capital-intensive nature of telecom operations) மற்றும் 5ஜி உள்கட்டமைப்பில் நீடித்த முதலீடுகளை (sustained investments in 5G infrastructure) கருத்தில் கொண்டு, கட்டண பழுதுபார்ப்பு தேவை என்று ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா இரண்டுமே குரல் கொடுத்துள்ளன.
ஆக உடனடி விலை உயர்வுக்கு பதிலாக, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது ஒரு நுட்பமான அணுகுமுறையை பயன்படுத்தலாம். அதாவது ஒட்டுமொத்த ஏஆர்பியு-வை அதிகரிக்க குறைந்த விலை நிர்ணயம் கொண்ட ரீசார்ஜ் விருப்பங்கள் இன்னும் குறைக்கப்படலாம். மேற்குறிப்பிட்டபடி இதுதான் "மறைமுகமான விலை உயர்வு" ஆகும்.
இந்த விஷயத்தில் ஜியோவின் நிலைப்பாடு என்ன? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் Q2 FY26 அழைப்பில், நிறுவனம் ரூ.211.4 ஏஆர்பியு-வை பதிவு செய்துள்ளதாக கூறியிருந்தது. இது முந்தைய காலாண்டில் இருந்த ரூ.208.8-ஐ விட அதிகமாகும். முறையான கட்டண உயர்வுக்கு "உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை" என்றும் ஜியோ குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், குறுகிய கால அளவு ஆதாயங்களை விட நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட விலை நிர்ணய உத்தியை பிரதிபலிக்கும் வகையில், "நுகர்வோர்களை அதிகமாக நுகர செய்யவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் அதிக பணம் செலுத்தவும்" ஜியோ நிறுவனம் தூண்டும் என்பதை ஜியோ நிறுவன நிர்வாகிகள் கூறுவதாக டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது பயனர்களை மாதாந்திர அல்லது காலாண்டு ரீசார்ஜ்களை நோக்கி நகர ஊக்குவித்துள்ளது மற்றும் சிறந்த பணப்புழக்கத் தெரிவுநிலை உடனான வருவாய் சுழற்சியையும் உருவாக்கியுள்ளது. ஏர்டெல்லும் இதேபோன்ற அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் செல்லுபடியாகும் டெய்லி 1.5 ஜிபி திட்டம் தான் - இப்போது பெரும்பாலான ப்ரீபெய்ட் பயனர்களுக்கான புதிய என்ட்ரி லெவல் ரீசார்ஜ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








