BSNL விஸ்வரூபம்.. 4G சேவைக்கு TATA.. இந்த தடவ மிஸ் ஆகாது.. ரூ.15,000 கோடியாச்சே.. என்ன நடக்குது?
பல வருடங்களாக இழுத்தடிப்பில் இருக்கும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வெளியீடாது, அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த முறை மிஸ் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு களத்தில் மிகப்பெரும் நிறுவனம் குதித்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு நிம்மதி பெருமூச்சே வந்துவிட்டது.
இப்போது வரும், அப்போது வரும், என்று பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் எதிர்பார்க்கும் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) இன்றளவும் அவர்களுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கியும், நாடு முழுவதும் இருக்கும் 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்காளாக மாற்றும் பணி தொடங்கி பல மாதங்களாகியும் எதுவும் மாறவில்லை.

இதனிடையே பழைய பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை 4ஜி சிம்கார்டுகளாக மாற்றும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தன. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மேம்படுத்தும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிதாக 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுவிட்டன.
ஆகவே, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று பிஎஸ்என்எல், தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி கடந்த மார்ச் 2ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தெரிவித்திருந்தார். இதனால், தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் படு குஷியில் இருந்தனர்.
ஆனால், வழக்கம்போல மீண்டும் 4ஜி சேவைகள் தள்ளிப் போய்விட்டது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே 4ஜி சேவையை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் முயற்சித்ததால், அங்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று டெலிகாம் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

இதை உறுதி செய்யும் விதமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இப்போது, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டிசிஎஸ் (Tata Consultancy Services - TCS) நிறுவனத்துடன் ரூ15,000 கோடி மதிப்பில் 4ஜி சேவை வழங்குவதற்கான மிகப்பெரும் ஒப்பந்தத்தை செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாட்டின் 4 பிராந்தியங்களில் டேட்டா மையங்கள் நிறுவப்பட இருக்கிறது. அதேபோல மத்திய அரசின் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம், சி-டாட் (Centre for Development of Telematics C-DOT) உடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமானது, இணைந்து ஒப்பந்தங்களை செய்து முடிக்க இருக்கிறது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் 38 வெவ்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் கட்டமைப்புகள் செய்யப்பட இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி என் கணபதி சுப்பிரமணியம் உறுதி செய்திருக்கிறார். அதோடு 38 டேட்டா மையங்கள் குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
நான்கு பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் முதன்மை சேவையகம் மற்றும் பேரழிவு மீட்பு சேவையகம் என்று 2 பெரிய டேட்டா சென்டர்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன. இதற்கு அடுத்தப்படியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க் கிடைக்கும் 30 பகுதிகளிலும் டேட்டா மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. ஆகவே, 38 பகுதிகளில் கட்டமைப்புகள் நிறுவப்படுகின்றன.
இந்த பணிகளை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த ஹார்டுவேர் சப்ளை பார்ட்னர்களுடன் கைகோர்த்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் 4ஜி சேவையை முழுவீச்சில் வழங்கி முடித்துவிட்டன. இப்போது 5ஜி சேவையை கஸ்டமர்களிடையே கொடுக்க தொடங்கி, அந்த பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது.
சொல்லப்போனால், அடுத்த சில மாதங்களில் 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஏனென்றால், நாட்டின் தொலைத்தூர பகுதிகளில் ஜியோ, ஏர்டெல் சேவைகள் கிடைக்காத இடங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கிடைக்கிறது. இதனால், அந்த நிறுவனம் தவிர்க்க முடியாததாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications