மறுபடியும் விலை உயர்வு.. சைலெண்டாக உயர்ந்த Airtel ரீசார்ஜ் கட்டணங்கள்.. டேட்டா குறைப்பு.. எந்த திட்டங்கள்?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் சத்தமே இல்லாமல் ப்ரீபெய்ட் திட்டங்களின் டேட்டாவை பாதிக்கு மேல் குறைத்து இருக்கிறது. இதனால், விலையில் மாற்றம் இல்லை என்றாலும், இதே சலுகைகளை பெற கூடுதலாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. எந்தெந்த திட்டங்களில் டேட்டா குறைக்கப்பட்டுள்ளது, இதனால் கூடுதலாக செலவு ஏற்படுமா என்பதை பார்க்கலாம்.
டிசம்பர் மாதத்தில் இருந்து ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று டெலிகாம் வட்டாரங்களில் பேசப்பட்டன. ஆனால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் நேரடியாக விலையை உயர்த்தவில்லை. ஆனால், மலிவு விலைக்கு கிடைக்கும் திட்டங்களை நீக்குவது, டேட்டா சலுகைகளை குறைப்பது போன்றவற்றை செய்ய தொடங்கிவிட்டன. இதனால், மலிவாக கிடைத்த சலுகைகள் கூடுதல் விலைக்கு சென்றுவிட்டன.
இதைத்தான் இப்போது பார்தி ஏர்டெல் நிறுவனம் செய்துள்ளது. ஏர்டெல்லில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா, 1 ஜிபி டேட்டா கொண்ட கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற பிரத்யேக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதில் ஏர்டெல் ரூ.51 திட்டம், ஏர்டெல் ரூ.101 திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.151 திட்டம் முக்கியமாக இருக்கிறது.
இந்த திட்டங்களில் முறையே 3 ஜிபி டேட்டா, 6 ஜிபி டேட்டா மற்றும் 9 ஜிபி டேட்டா கிடைத்தது. இந்த டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்பட்டது. ஆகவே, தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா, 1 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்த இந்த திட்டங்கள் முக்கியமாக இருக்கின்றன.

இப்போது, இதில் டேட்டா சலுகை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஏர்டெல் ரூ.51 திட்டத்தில் இப்போது 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் ரூ.101 திட்டத்தில் 2 ஜிபி டேட்டாவும், ஏர்டெல் ரூ.151 திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவும் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, பாதிக்கும் மேல் டேட்டா குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சீக்கிரமாக காலியாகிவிடும்.
ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதேபோல இந்த திட்டங்கள் கிடைக்க தகுதியான ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே இவை காண்பிக்கப்படுகிறது. ஆகவே, இந்த டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தகுதியாக இருக்கும் கஸ்டமர்கள் தினசரிக்கு 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களை வைத்திருந்தால் அவர்களுக்கு காண்பிக்கப்படும்.
இந்த ஆட்-ஆன் டேட்டா பேக்குகளில் கொடுக்கப்படும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கும் இனிமேல் வரம்பு இருக்கிறது. தினசரிக்கு அன்லிமிடெட் சலுகையில் டேட்டாவை பயன்படுத்தினாலும், மாதத்துக்கு அதிகபட்சம் 300 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு பிறகு தினசரி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இந்த விவரங்கள் அனைத்தும் TelecomTalk வழியாக தெரிய வந்துள்ளது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தினசரிக்கு 1 ஜிபி டேட்டாவுடன் கிடைத்த ரூ.249 விலை கொண்ட திட்டத்தை நீக்கியது. அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டாவுடன் மலிவான விலைக்கு கிடைத்த ரூ.189 ப்ரீபெய்ட் திட்டத்தையும் நீக்கியது. இதுபோக கடந்த வாரம் 2 டேட்டா திட்டங்களை நீக்கியது.
அதாவது, ஏர்டெல் ரூ.121 திட்டம் (Airtel Rs 121 Plan) மற்றும் ஏர்டெல் ரூ.181 திட்டம் (Airtel Rs 181 Plan) ஆகிய டேட்டா திட்டங்கள் நீக்கப்பட்டன. இப்படி விலையில் மாற்றங்களை செய்யவில்லை என்றாலும், திட்டங்களின் சலுகைகளை குறைப்பது மற்றும் மலிவான விலை கொண்ட திட்டங்களை நீக்குவது மூலமாக மறைமுகமாக விலையை உயர்த்தும் செயல்கள் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








