புதிய தளர்வுகள்- இனி இதுக்கு இ-பாஸ் தேவையில்லை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று பரவலின் தீவிரம்
நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 28.6.2021 காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள தளர்வுகளானது 5.7.2021 காலை 6 வரை செல்லுபடியாகும்.

மூன்று வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்
அறிவிப்புப்படி, மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வகை 1-ல் 11 மாவட்டங்கள் உள்ளன. அது கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகும். இந்த மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாக இருந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. இதையடுத்து கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகை 2-ல் உள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கையில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகும். அதேபோல் வகை 3-ல் உள்ள மாவட்டங்கள் குறித்து பார்க்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்
வகை 2 மற்றும் வகை 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை 2 மற்றும் வகை 3-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

இ-பாஸ் பெற வழிமுறைகள்
வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2,3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) மணமகன், மணமகள் அல்லது அவர்கள் பெற்றோர் விண்ணப்பித்து பெறலாம்.

நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகள்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என்பது அவசியம். அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இ-பதிவு குறித்த சந்தேகங்கள்
இதையடுத்து இ-பதிவு குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா சேவையை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்படுத்த முடியும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகள்
தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்., https://tnepass.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுக வேண்டும். மொபைல் எண்ணை உள்ளிட்ட அதில் கிடைக்கும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். நீங்கள் பயணிக்கும் வாகனத் தேர்வை கிளிக் செய்த பிறகு, தங்களது பெயர், முகவரி (வீடு மற்றும் செல்லும்இடம்), பயண வரம்பு ( மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே) என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் பயணத்தின் நேரம், எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் பயணர்கள் விவரம், வாகன விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் உள்ளிட வேண்டும்.


Click it and Unblock the Notifications