செப்டம்பர் 15 முதல் எல்லாமே மாறுது.. டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்.. இதோ விவரம்
தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர், தங்களது அரசு ஊழலுக்கு இடமில்லாத வகையிலும், நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களை சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகள் தபால் வழியாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நடைமுறையால், விண்ணப்பதாரர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச்சான்று அட்டையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஆவணங்களைப் பெறுவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை தபால் மூலம் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் (Digital) முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
அதன்படி வரும் 15.09.2026 முதல் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, Digital Driving License மற்றும் Digital Registration Certificate ஆகியவற்றை எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் நடைமுறை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் (Digital RC) நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், புதிய வாகனம் வாங்குவோர் தங்களது வாகனப் பதிவுச்சான்றிதழை இணையதளம் வழியாக டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்ச்சி பெற்ற அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள், ஆவணங்களில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அவற்றின் உண்மைத்தன்மையை மின்னணு முறையில் எளிதாகச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்களின் பயன்பாடு தடுக்கப்படும். மேலும், ஆவணம் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதனை மீண்டும் இணையவழியாகப் பதிவிறக்கம் செய்து தேவைக்கேற்ப அச்சிட்டுப் பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
இதுதவிர ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து சேவைகளுக்கும், தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பிக்கும் வகையில் "Anywhere Registration / Licensing" வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications