தமிழக அரசு அதிரடி.. ஜூன் 6 முதல்.. குழந்தைகளுக்கு ஆதார் வாங்குவது இனி ரொம்ப ஈஸி.. எப்படி தெரியுமா?
இந்தியாவில் ஆதார் (Aadhaar) மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. குறிப்பாக அரசு அமல்படுத்தி இருக்கும் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறவும் ஒருவருக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வாங்கத் தமிழக அரசு சூப்பர் முடிவு எடுத்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பள்ளிகள் திறக்கும் ஜூன் 6-ம் தேதி அன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் பதிவு திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் பள்ளி மாணவர்கள் ஆதார் வாங்க அலைய வேண்டியதில்லை. மாணவர்களுக்குப் பள்ளிகளில் எளிமையாக ஆதார் கிடைத்துவிடும்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், மாணவ, மாணவிகள் நலனுக்காகப் பல புதுமையான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை, பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, பஸ் பயண அட்டை, மிதிவண்டிகள் மற்றும் சத்துள்ள மதிய உணவு போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாகச் செய்யப்படுகின்றன.

இதுதவிர 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவிக்தொகை மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஊக்கத்தொகை ஆனது மாணவ, மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், நேரடி பயனாளர் பரிமாற்றம் (டி.பி.டி) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திவிடும் முறை நடைமுறையில் உள்ளது.
அதேபோல் மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் மிகவும் அவசியமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிவிடுவது அவசியமாகும்.
மேலும் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கும், புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளுக்கும், தமிழ்நாடு மின்னணு நிவனத்தைக் (எல்காட்) கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதாவது இந்திய அடையாள ஆணையத்திடம் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்கம் சுமார் 770 ஆதார் பதிவு கருவிகளை கொள்முதல் செய்து எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பின்பு ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஆதார் தரவு உள்ளீட்டார்களை எல்காட் நிறுவனம் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளைத் தொடங்கும்.
குறிப்பாக பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்புத் திட்டத்தை முன்னெடுப்பது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான 6-ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தொடங்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications