Google Pay பயனர்களே உஷார்: இப்படியொரு நூதன மோசடி நடக்குதா? காவல்துறை எச்சரிக்கை!
இந்தியாவில் கூகுள் பே,பேடிஎம், போன்பே ஆகிய செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். முக்கிய நகரங்கள் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்த செயலிகளில் சில சலுகைகள் கூட கிடைக்கிறது.
இந்த செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. மேலும் மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.

அதேபோல் இந்தியாவில் மிகவும் பிரபலமான செயலியாக இருக்கிறது கூகுள் பே செயலி. இந்நிலையில் இந்த கூகுள் பே செயலியில் புதுவிதமான மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகாப் பார்ப்போம்.
நூதன மோசடி
அதாவது மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த கூகுள் பே செயலியில் ஒருசிலர் நூதன மோசடியில் இறங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காவல்துறை வெளியிட்டது. அதன்படி கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது எண்ணுக்கு அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே மோசடி செய்பவர்கள் பணத்தை அனுப்பலாம்.

அதன்பின்பு ஒரு அழைப்பு வரும். அதில் தெரியாமல் தவறுதலாகப் பணத்தை அனுப்பிவிட்டதாகவும், நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன். அதில் பணத்தைத் திருப்பி கொடுங்கள் என்று கூறுவார்கள். அப்படிப் பணத்தை நாம் திருப்பி அனுப்பும் பட்சத்தில் நமது வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாக யாரேனும் மொபைல் போனில் தொடர்பு கொண்டால் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அடையாள சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில முக்கிய விஷயங்கள்
அதேபோல் UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது உங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். ஆனால் மற்றொருவரிடம் பணத்தை பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும், பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்குப் பணம் அனுப்புவது நல்லது இல்லை. குறிப்பாக உங்களது UPI பின்னை எப்போதுமே ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதை யாருடனும் பகிர கூடாது. குறிப்பாகப் பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை.
அதேபோல் போன் மூலம் வங்கி ஊழியர்கள் என்று கூறி, ரகசிய தகவல்களைக் கேட்டால் யாரும் பகிர வேண்டாம். பின்பு முன்பின் தெரியாதவர்களிடம் ஓடிபி-ஐ எப்போதும் சொல்லக் கூடாது. குறிப்பாக இதன் மூலம் தான் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதேபோல் ஆபர் என்று முன்பின் தெரியாத நிறுவனங்களிடம் வரும் இணைப்புகளை கிளிக் செய்தால் கூட பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எப்போதும் ஆன்லைனில் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








