தமிழர்களின் ஆதார் விபரங்கள் இணையத்தில் வெளியானதா? 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் அம்பலமா?
யாரும் எதிர்பார்த்திடாத வகையில் பெரிய சைபர் செக்யூரிட்டி தாக்குதல் தற்பொழுது தமிழகத்தில் நடந்தேறியுள்ளது. தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இப்போது ஆன்லைனில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் சுமார் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எப்படி நடந்தது? இதனால் என்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

ஸ்டார்ட் அப் நிறுவனம் கண்டுபிடித்த ஹேக்கிங்
தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இணையத்தில் கசிந்துள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவளை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியானதா?
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் தகவல்கள் ஹேக்கர் மன்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய மிக முக்கியமான தகவல்கள் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் நம்பர், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மொபைல் எண் அம்பலமா?
இணையத்தில் லீக் ஆன ஆதார் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் நம்பர், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மொபைல் எண் போன்ற மிக முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது என்று டெக்னிசன்ட் நிறுவனம் கூறியுள்ளது. பயனர் விவரங்கள் இணையத்தில் கசிந்தது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் கசிந்தது
தரவு பாதுகாப்பு சட்டம் இல்லாத நிலையில் தமிழகம் அதன் குடியிருப்பாளர்கள் குறித்து கூடுதல் தரவுகளைச் சேகரிக்க எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த மீறல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண்கள் இணையத்தில் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications