தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு ரெடி.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக (Ration Card) காத்திருக்கும் மக்களுக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அதாவது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, இந்தப் பணிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், புதிய அரசு அமைந்த பிறகும் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால், விண்ணப்பதாரர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், புதிய ரேஷன் கார்டுக்காக ஆன்லைன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணனிடம் புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புதிய குடும்ப அட்டைகளை அச்சிடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்குள் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று உறுதியளித்தார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 41 ஆயிரத்து 335 குடும்ப அட்டைகள் ( ரேஷன் கார்டுகள்) பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) வைத்திருப்பவர்கள், தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் e-KYC (மின்னணு சரிபார்ப்பு) மேற்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கான பணிகளும் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
e-KYC செயல்முறையை ரேஷன் கடைகளில் எளிதாக முடிக்கலாம். அங்கு உள்ள கைரேகை அல்லது கண்கருவிழி (Iris) சரிபார்ப்பு சாதனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது விவரங்களை மின்னணு முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களது ரேஷன் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்துகொள்ள, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 8939922990 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பலாம். இதன் மூலம் பல்வேறு சேவைகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

PDS 101 எனக் குறுஞ்செய்தி அனுப்பினால், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதேபோல், PDS 102 என அனுப்பினால், அந்த ரேஷன் கடை தற்போது திறந்துள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலைப் பெற முடியும்.
இதற்கிடையில், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து முக்கிய சேவைகளையும் பொதுமக்கள் TN PDS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications