புதிய மாற்றம்.. மின் இணைப்பு.. கரண்ட் பில்.. புது மீட்டர்.. இனி மொபைல் ஆப்-தான்.. தமிழ்நாடு மின்சார வாரியம்!
புதிய மின் இணைப்பு, மின்சார கட்டணம், பழுதடைந்த மீட்டர், மின்சார துண்டிப்பு நேரம், நுகர்வோர் கோரிக்கை உள்ளிட்ட அனைத்தும் மொபைல் ஆப் மூலமாக செய்து முடிக்கப்போகிறது, தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board). எப்போது சேவை தொடங்குகிறது தெரியுமா?
கரண்ட் பில் கட்ட வரிசையில் நிற்பது, புது மீட்டர் அல்லது மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு நேரடியாக அலுவலகத்துக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இப்போது எல்லாமே ஆன்லைனுக்கு மாறி வருகிறது. இதில் கரண்ட் பில்லை தவி மற்ற ஆன்லைன் சேவைகளை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

முக்கியமாக நுகர்வோரின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் மீதான நடிவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதை மறுக்க யாரும் முடியாது. இதனால், நுகர்வோர்கள் மத்தியில் அதிருப்தியும், புகார்களும் எழுந்து வருகின்றன. இதை சரி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியமானது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்போது, நுகர்வோர்களின் விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற டாங்கட்கோ மொபைல் ஆப் (Tangedco Mobile App) சேவையை கொண்டுவர இருக்கிறது. இந்த மொபைல் ஆப்பின் சோதனை ஓட்டம் ஏற்கனவே சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருக்கும் 12 மண்டலங்களில் நடந்து முடிந்துள்ளது.
ஃபீல்ட் ஸ்டாஃப் மொபைல் ஆப், ஃஎப்எஸ்எம்ஆப் (Field Staff Mobile App - FSMAPP) என்னும் இந்த ஆப்பானது, நுகர்வோர்களுக்கு கிடையாது. டாங்கெட்கோவின் உதவிப் பொறியாளர்கள், லைன்மேன்கள், ஃபோர்மேன்கள் மற்றும் வயர்மேன்கள் போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நுகர்வோர்களின் விண்ணப்பங்களை இவர்களால் அலுவலகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

அதேபோல ஒவ்வொரு முறையும் புதிய விண்ணப்பங்களை சரிபார்த்தல், எந்த தேதியில் எந்த புதிய இணைப்பை வழங்க வேண்டும், எந்த இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது, மின்சார இணைப்பை துண்டிக்கும் நேரத்தில் கட்டண விவரங்களை சரிபார்த்தல், இதுபோன்ற அனைத்து விவரங்களையும் சர்வரில் புதுப்பித்தல் போன்ற பலவற்றுக்கு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.
சில காரியங்களை மொபைல் மூலம் கேட்டு செய்து முடித்தாலும், விரைவாக பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதனாலேயே தமிழ்நாடு மின்சார வாரிய மொபைல் ஆப் (Tamil Nadu Electricity Board Mobile App) கொண்டுவரப்பட்டுள்ளதாக டாங்கெட்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் மூலம் லைன்மேன் மற்றும் ஃபோர்மேன்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி விவரங்கள், முடிக்கப்பட்ட பணி விவரங்கள், நுகர்வோர் விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகள், நுகர்வோர்களின் விவரங்கள் சரிபார்ப்பு போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இதனால், அலுவலகத்தில் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், புதிய மின் இணைப்பு, பழுதடைந்த மீட்டர்கள் மாற்றுவது, கரண்ட் பில் சரிபார்ப்பு, மின் விநியோகம் துண்டிக்கப்பட வேண்டிய பகுதிகள், துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்ட பகுதிகளை தெரிந்து கொள்வது போன்ற வசதிகளையும் வழங்க இருக்கின்றது. ஆகவே, பெரும்பாலான பணிகளை இந்த ஆப் மூலம் விரைவில் செய்து முடிக்கலாம்.
லைன்மேன், ஃபோர்மேன்கள் உள்பட மின்சார வாரிய அலுவலர்கள் அனைவருக்கும் இந்த ஆப் பெரிதும் உதவியாக இருக்கப்போகிறது. இந்த ஆப் சேவை வந்துவிட்டால், நுகர்வோர்களின் விண்ணப்பங்கள் அதிவிரைவில் முடித்து கொடுக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு படிப்படியாக அனைத்து மண்டல அலுவலகங்களில் விரிவுபடுத்தப்படும் என்று டாங்கெட்கோ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








