வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த 12 ஆவணங்கள் போதும்.. ஓட்டுப் போடலாம்..
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை (voter id) இல்லாதவர்கள், இசிஐநெட் இணையதளத்திற்குச் சென்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை ஓடிபி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒருவேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். அதன் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- பான் கார்டு
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
- தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
- நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அல்லது சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
- மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஊனமுற்றோர் அடையாள அட்டை
இந்த பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். குறிப்பாக பூத் சிலிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு, வாக்களிப்பதற்குச் செல்லத்தக்கதல்ல. அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், இவற்றில் எந்த ஆவணத்தையும் வைத்து வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாளை வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. குறிப்பாகத் தேர்தல் பணியாளர்களிடம் உங்கள் போனை சுவிட்ச் ஆஃப் செய்து ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு டோக்கன் வழங்குவார்கள். வாக்கு செலுத்தி முடித்து வெளியே வரும்போது இந்த டோக்கனைத் தந்து உங்கள் மொபைல் போனை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக ஆர்வக்கோளாறால் சட்டச்சிக்கலில் சிக்காமல் இருக்க, வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன், கேமரா மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications








