வயித்தெரிச்சல் சும்மா விடுமா.. Swiggy-க்கு அபராதம், 45 நாள் கெடு.. ரூ.103-காக தெறிக்கவிட்ட தெலுங்கானா காரர்!
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (District Consumer Disputes Redressal Commission) ஆனது ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு (Unfair trade practices) எதிராக தீர்ப்பளித்து உள்ளது. கூடவே அபராதமும், அதை செலுத்துவதற்காக 45 நாட்கள் கெடுவும் வழங்கி உள்ளது.
என்ன நடந்தது? ஹைதராபாத்தில் வசிக்கும் பாபு என்பவர், ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப்பை (Swiggy One Membership) வாங்கி உள்ளார். ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப் என்பது இலவச டெலிவரி (Free Delivery) மற்றும் கூடுதல் தள்ளுபடிகளை (Extra Discounts) வழங்கும் ஸ்விக்கி நிறுவனத்தின் கட்டண சந்தாவாகும்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று ஸ்விக்கியில் ஆர்டர் செய்தபோது பாபுவிற்கு இலவச டெலிவரி செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்விக்கி மெம்பர்ஷிப் பலன்கள் இருந்தபோதிலும் கூட, டெலிவரி தூரத்தை 9.7 கிலோமீட்டரிலிருந்து 14 கிலோமீட்டராக உயர்த்தியதாக கூறி அவரிடம் ரூ.103 டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாபு அளித்த புகார் மற்றும் அவர் வழங்கிய கூகுள் மேப்ஸ் ஸ்கிரீன்ஷாட்கள் உட்பட பல ஆதாரங்களை நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது.ஆனால் ஸ்விக்கி இந்த விசாரணைக்கு வரவில்லை. இதனால் பாபு, எதிர்தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே தன்னிடம் இருந்த ஆதார ஆவணங்களை கொண்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக தீர்ப்பு பாபுவிற்கு சாதகமாக வந்தது.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமானது தனது தீர்ப்பில், 103 டெலிவரி கட்டணத்துடன், தாக்கல் செய்த நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் 350.48 ரூபாயை திருப்பி தருமாறு ஸ்விக்கி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. மேலும் பாபுவின் மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்காக ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், வழக்கு செலவுகளில் ரூ.5,000 ஈடுகட்ட வேண்டும் என்றும், ஸ்விக்கி ஒன் மெம்பர்களுக்கான டெலிவரி தூரத்தை உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
கூடுதலாக, ஸ்விக்கி நிறுவனம் ரூ.25,000 அபராதத் தொகையாக ரங்கா ரெட்டி மாவட்ட ஆணையத்தின் நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்தமாக - ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.35,453 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை நிறைவேற்ற ஸ்விக்கி நிறுவனத்திற்கு 45 நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் இதுபோன்ற செய்தி தலைப்புகளில் சிக்குவது ஒன்றும் முதல் முறையல்ல. ஆனால் எல்லா நேரமும் இது "மோசமான விஷயங்களுக்காக" மட்டுமே சிக்குவதில்லை. சில சமயங்களில் சிலிர்ப்படைய வைக்கும் செய்திகளிலும் ஸ்விக்கி நிறுவனத்தின் பெயர் வருவதுண்டு. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தான்.
அது - ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த ஒரு பெண்ணின் மூலம், அதை டெலிவரி கொடுக்க சென்ற ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு நல்ல வேலை கிடைத்த சம்பவம் ஆகும். சாஹில் சிங் (Sahil Singh) என்கிற என்ஜினீயரிங் படித்த இளைஞரின் வேலை கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் பறிபோய் உள்ளது. அதன் விளைவாக அவர் ஸ்விக்கி டெலிவரி பெர்சனாக வேலை செய்யும் சூழலுக்குள் தள்ளப்பட்டார்.
இதற்கிடையில், ப்ரியான்ஷி சாண்டல் (Priyanshi Chandel) என்பவருக்கு டெலிவரி செய்யப்போனபோது அவருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. இதற்காக ப்ரியான்ஷி லிங்க்டுஇன் தளத்தை பயன்படுத்தி உள்ளார். அவரது பதிவில், "நான் ஸ்விக்கி வழியாக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தேன். 30-40 நிமிடங்களுக்குப் பிறகு எனது வீட்டின் டோர் பெல் ஒலித்தது. கதவை திறந்த போது ஒரு இளைஞன் மூச்சுவாங்கிக்கொண்டே என் பிளாட்டுக்கு வெளியே இருந்த படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்.
அதை பார்த்ததும் என்ன நடந்தது என்று பேச தொடங்கினேன். அவர் பேச ஆரம்பித்தார்: மேடம், என்னிடம் ஸ்கூட்டியோ அல்லது பயணிக்க போக்குவரத்து வசதியோ இல்லை, உங்கள் ஆர்டருக்காக நான் 3 கிமீ தூரம் நடந்தே வந்தேன். என்னிடம் முற்றிலுமாக பணம் இல்லை. ஏனென்றால், என்னுடன் தங்கும் நபர் எனது யூலு வாகனத்திற்காக நான் வைத்து இருந்த மிச்சமீதி பணத்தையும் எடுத்துக்கொண்டார்.
எனது வீட்டு உரிமையாளருக்கு கொடுக்கவும் கூட என்னிடம் பணம் இல்லை. நான் ஏமாற்றுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் நானொரு இசிஇ (ECE) என்ஜினீயரிங் பட்டதாரி. கோவிட் சமயத்தில் ஜம்முவிற்கு செல்வதற்கு முன்பு பைஜுஸ், நிஞ்சாகார்ட்டில் வேலை செய்தேன். இந்த ஆர்டர் டெலிவரிக்கு கூட எனக்கு 20 - 25 ரூபாய்தான் கிடைக்கும்.
12 மணிக்கு முன்பாக இன்னொரு டெலிவரி எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு எங்காவது தூரமாக டெலிவரிக்கு அனுப்புவார்கள், என்னிடம் பைக் இல்லை. ஒரு வாரமாக சாப்பிடவில்லை, வெறும் தண்ணீர் மற்றும் தேநீர் மட்டுமே குடிக்கிறேன். எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தாருங்கள். முன்னதாக நான் ரூ.25 ஆயிரம் சம்பாதித்தேன் என்று பேசி முடித்தார்.
இந்த உரையாடலின் முடிவில் அவருக்கு என்னால் கொடுக்க முடிந்ததெல்லாம் - ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் ரூ.500 மட்டுமே. அவரது அடையாள சான்று புகைப்படங்களுடன் அவரது தொடர்பு விவரங்கள் கீழே உள்ளன" என்று ப்ரியான்ஷி சாண்டல் லிங்க்டுஇன் வழியாக பதிவிட்டு இருந்தார். பின்னர் (அந்த நேரத்தில்) மற்ற லின்க்டுஇன் பயனர்களின் உதவியுடன் சாஹில் சிங்கிற்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்தது!


Click it and Unblock the Notifications