1 யூஸ் பண்ணவே படாத பாடு.. ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் சுந்தர் பிச்சை.. ஏன் தெரியுமா?
செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதேபோல் கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து போன்களில் புதிய புதிய அம்சங்களை வழங்கிய வண்ணம் உள்ளன. குறிப்பாக ஏஐ போன்ற அம்சங்களைப் பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேசமயம் ஒருவர் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே படாத பாடு பாடும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதாகக் கூறி அதிர வைத்துள்ளார். மேலும் இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன்பின்பு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார். படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியைப் பெற்றார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட முக்கியமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தான் ஒரே சமயத்தில் தான் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ரகசியத்தைச் சொல்லி ஆச்சரியப்பட வைத்தார்.

சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கான ரகசியம் என்னவென்றால், பணி நிமித்தமாக இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
குறிப்பாக இப்படி செயல்பட்டால்தான், பொதுமக்கள் விரும்பும் புத்தம் புதிய அம்சங்களைக் கூகுள் நிறுவனத்தால் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார் அவர். அதேபோல் இந்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்தும் சுந்தர் பிச்சை பேசியுள்ளார். அதாவது குழந்தைகள் அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதைக் கண்டிக்காமல், கட்டுப்படுத்தும் விதத்தில் பெற்றோர்களின் அணுகுமுறை இருக்க வேண்டும்.
குழந்தைகள் எவ்வளவு நேரம் செல்போன் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக் குழந்தைகள் அவர்கள் போக்கில் விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏஐ தொழில்நுட்பத்தில் வளர்ச்சி குறித்துப் பேசிய சுந்தர் பிச்சை, மனிதர்கள் உருவாக்கி மிக முக்கியமான தொழில்நுட்பமாக இந்த ஏஐ இருக்கும். நெருப்பும், மின்சாரமும் மனித வாழ்வில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோன்று இந்த ஏஐ தொழில்நுட்பம் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
அதேபோல் சமீபத்தில் சுந்தர் பிச்சை தினமும் காலையில் எழுந்த உடன் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் செய்தி ஆர்வலர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு சிறப்பு இணையதளத்தைப் படிப்பதாகத் தெரிவித்தார். அந்த இணையதளத்தின் பெயர் Techmeme என்று அமெரிக்கப் பத்திரிகையான வயர்டுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








