ஏசி,பிரிட்ஜ் போலவே கேஸ் அடுப்புக்கும் ஸ்டார் ரேட்டிங் திட்டம்.. எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா?
ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை பலர் ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் தான் வாங்க விரும்புகின்றனர். இதேபோல் கேஸ் அடுப்புகளும் இனி ஸ்டார் ரேட்டிங் பார்த்து வாங்கும் காலம் வரும். அதாவது வரும் 2026-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கேஸ் அடுப்புகளுக்கு (gas stove) ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கேஸ் அடுப்பின் திறன் மற்றும் நீடிக்கும் காலத்தை வைத்து இந்த ரேட்டிங் தரப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தரமான மற்றும் நீண்ட காலம் உழைக்கக்கூடிய கேஸ் அடுப்பைத் தேர்ந்தெடுத்து வாங்க முடியும். மேலும் இனி வரும் புதிய அடுப்புகளின் தரம் ஒரே மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆற்றல் திறன் பணியகத்துடன் இணைந்து மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதுவும் வீட்டு உபயோக கேஸ் அடுப்புகளுக்கு 2026 ஜனவரி 1 முதல் 2028 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மூன்று வருடங்களுக்கு இந்த ஸ்டார் ரேட்டிங் திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கேஸ் அடுப்புகளுக்கான ஸ்டார் ரேட்டிங் ஆனது அவற்றின் வெப்பத் திறன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எவ்வளவு எரிவாயுவைப் பயன்படுத்த முடிகிறது மற்றும் எவ்வளவு சூட்டை அந்த அடுப்பு தருகிறது என்பதை வைத்து ரேட்டிங் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கேஸ் அடுப்புக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டால், அந்த அடுப்பு 68 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வெப்பத் திறனைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் நல்ல அடுப்பை தேர்ந்தெடுக்க இது உதவும். மேலும் இதனால் தரமான அடுப்புகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும், எரிவாயு மிச்சமாகும், பணமும் மிச்சமாகும்.
அதுவும் இந்த திட்டத்தில் முதலில் கேஸ் அடுப்புகளின் வெப்பத் திறன் பரிசோதிக்கப்படும். அதன் அடிப்படையில் ஸ்டார் ரேட்டிங் தரப்படும். பின்பு இந்த ரேட்டிங்கை அடுப்பின் மீது ஸ்டிக்கராக ஒட்டுவார்கள் எனவும், அதை பார்த்து வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு உதாரணமாக கேஸ் அடுப்பு ஒன்று 70 சதவீத வெப்பத் திறன் கொண்டிருந்தால் அது ஒரு ஸ்டார் ரேட்டிங் பெறும். மேலும் மற்றொரு அடுப்பு 80 சதவீதம் வெப்பத் திறன் கொண்டிருந்தால் அது இன்னும் அதிக ஸ்டார் ரேட்டிங் பெறும். குறிப்பாக அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள அடுப்புகள் குறைந்த எரிவாயுவில் அதிக சூட்டை தரும் என அர்த்தம். இந்த திட்டம் மூலம் மக்கள் ஏமாறாமல் நல்ல அடுப்பை வாங்க முடியும். அதேசமயம் எரிவாயுவும் மிச்சம் ஆகும்.
கேஸ் அடுப்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு அடுப்புக்கும் மூன்று மாதிரிகளுக்கான சோதனை அறிக்கைகளை அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் சோதனை ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு (ILAC) மற்றும் ஆசியா பசிபிக் அங்கீகார ஒத்துழைப்பு அமைப்பு (APAC) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களால் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஏரி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் தற்போது ஸ்டார் ரேட்டிங் உடன் தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் கேஸ் அடுப்பும் ஸ்டார் ரேட்டிங் உடன் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit:shutterstock


Click it and Unblock the Notifications








