ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்.. இனி வரப்போகும் காலம்.. ஜாக்கிரதையா இருங்க.. ஸ்ரீதர் வேம்பு முக்கிய தகவல்..
உலகம் முழுவதும் பல்வேறு சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, நிறுவனங்களில் நடைபெறும் பணி நீக்கங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்சனைகள் பொதுமக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதுவும் வரவிருக்கும் காலங்கள் மேலும் சவாலானதாக இருக்கக்கூடும் என்பதால், மக்கள் அனைவரும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட முக்கிய தகவல்
ஐடி நிறுவனங்களில் நடைபெறும் பணிநீக்கங்கள் தற்போது சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது. பல நிறுவனங்கள் இதற்கான முக்கிய காரணமாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்ப வளர்ச்சியையே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இதுகுறித்து வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது AI மட்டும் பணிநீக்கங்களுக்குக் காரணமல்ல என்றும், உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மாற்றங்களும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கத்தில் அவர் பதிவொன்றையும் பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.
அதன்படி ஸ்ரீதர் வேம்பு தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்த பதிவில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவிலேயே, மக்கள் தற்போது AI-தொழில்நுட்பத்தை எதிர்மறையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்லூரி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் AI தொழில்நுட்பத்தை வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு "வில்லன்" போலவே கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர ஐடி நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு AI வசதியைக் காரணமாகக் கூறினாலும், அதுவே முழு உண்மை அல்ல என்றும் ஸ்ரீதர் வேம்பு விளக்கினார். அதாவது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள், வருவாய் அழுத்தங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளே பணிநீக்கங்களுக்கான முக்கிய காரணங்கள் என அவர் கூறியுள்ளார். தங்களைத் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் நிறுவனங்களாகக் காட்டிக்கொள்ள சில நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார். குறிப்பாக இப்போது ஜோகோ நிறுவனமும் இதே சூழ்நிலையை எதிர்கொண்டு தான் வருகிறது என்று வெளிப்படையாக ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

அதேபோல் உலக பொருளாதாரமும் அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து பலவீனமடைந்து வருவதாக ஸ்ரீதர் வேம்பு தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கான ஆரம்ப அறிகுறிகள் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியிலேயே தென்படத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். தற்போது ஏஐ துறையில் செய்யப்படும் முதலீடுகள் தற்காலிகமாகப் பொருளாதாரத்தை தாங்கி கொடுத்தாலும், இறுதி வரையில் அவை நிலைக்காது என்று கூறியுள்ளார்
மேலும் தன்னுடைய கணிப்புகளில் தவறு இருந்தால் கமெண்ட் செக்ஷனில் கூறுமாறும் ஸ்ரீதர் வேம்பு கூறி இருந்தார். அதற்கு ஒருவர் நிறுவனங்கள் தங்களுடைய நஷ்டத்தை மறைத்துவிட்டு எப்போதும் AI தொழில்நுட்பத்தை காரணம் காட்டிக்கொண்டு இருந்தால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையே போய்விடும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications