செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.!
பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது.

அதன்படி அமெரிக்காவின் நாசா அமைப்பு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியான்வென்-1
இதேபோல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 என்று அழைக்கப்படும் விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. குறிப்பாக 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ என்று கூறப்படுகிறது.

தற்சமயம் வெளிவந்த தகவலின்படி, செவ்வாய் கிரகத்தில் தியான்வென்-1 ரோவர் விண்கலம் ஆனது இப்போதுவெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் அதிநவீன கேமராக்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கினறன.

மேலும் சீனா ஏற்கனவே விண்வெளிக்கு வீரர்களை அனுப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிலவை ஆய்வு செய்வதற்கு விண்கலங்களை அனுப்பி அதில் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் செவ்வாய் கிரகத்தில் சீன விண்கலம் தரையிறங்கியிருப்பது மிகப் பெரிய சாதனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications