யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
மக்கள் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், மக்களை ஏமாற்றக்கூடிய புதிய வழிகளை ஏமாத்துக்காரர்கள் தொடர்ந்து புதிது புதிதாக கண்டுபிடித்து தான் வருகிறார்கள். அப்படி ஒரு புதிய வழியை பயன்படுத்தி தென்-கொரிய பெண் ஒருவரை ஒரு நபர் எலான் மஸ்க் என்று நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்.
ஆம் மக்களே உலகத்தின் முதல் பணக்காரர் என்று அழைக்கப்படும் எலான் மஸ்க் (Elon Musk) போலவே பேசி, பழகி, அந்த தென் கொரிய பெண்ணிடம் (South Korean woman) காதல் வார்த்தைகளை கூறி, $ 50,000 டாலர் பணத்தை மிகவும் நூதனமாக திருடிய ஒரு திருடனை பற்றி தான் இந்த பதிவு. எலான் மஸ்க் போல இன்னோரு நபரா? இதென்ன டபுள் ஆக்ஷனா? என்று கூட சிலர் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க் (Elon Musk)? உண்மை தானா?
நன்கு படித்து, ஒரு நிலையான அலுவலகத்தில் உயர் பதவியில் வேலை பார்த்து வரும் பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவர் எலான் மாஸ்க் (Elon Musk) பெயர் மற்றும் தோற்றத்தை வைத்து மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார். தென் கொரிய பெண்ணை எப்படி அந்த நபர் எலான் மஸ்க் என்று நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார். இதன் முழு விபரம் இதோ. இந்த நிகழ்வை யாரும் நம்பமாட்றாங்க என்று குமுறுகிறார் அந்த பெண்.
டீப்ஃபேக் (Deepfake) டெக்னாலஜி வந்த பிறகு பிரபலங்களின் முகத்தை கண்டபடி தப்பான காரியங்களுக்காக பலர் பயன்படுத்துவதை தொடர்ந்து நாம் படித்து தான் வருகிறோம். ஆபாச தளங்களில் பெண் பிரபலங்களை பயன்படுத்தி தவறு செய்து வந்த மோசடிக்காரர்கள், இப்போது ஆண் பிரபலங்களின் முகங்களை டீப்ஃபேக் டெக்னலாஜி மூலம் பயன்படுத்தி, இளம்பெண்களை ஏமாற்றி வருகின்றனர். இப்படியான ஒரு சம்பவம் தான் இப்போது தென்கொரியாவில் நடந்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத தென் கொரிய பெண்ணின் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கிற்கு எலான் மஸ்க் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பிரென்ட்-ரெக்வஸ்ட் வந்துள்ளது. இந்த பெண் எலான் மஸ்க்கின் தீவிரமான ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் எப்படி மோசடிக்காரர்களுக்கு தெரிந்தது என்று இப்போது வரை விளக்கம் இல்லை. ஆனால், இந்த பெண் எலான் மஸ்கின் சுயவிவர கதைகளை படித்து அவர் மீது தனி அன்பு கொண்டவர் என்று கூறப்படுகிறது.

வீடியோ காலில் தென்கொரிய பெண்ணிற்கு "ஐ லவ் யூ" சொன்ன போலி எலான் மஸ்க்:
கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி எலான் மஸ்கிடம் இருந்து அந்த பெண்ணிற்கு இன்ஸ்டாகிராம் பிரென்ட் ரெக்வஸ்ட் (Instagram friend request) வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறை 8 மாதங்கள் இவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை, மற்றும் தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. முதலில் இது ஒரு போலியான கணக்கு என்று சந்தேகித்த பெண்ணை, நான் உண்மையான எலான் மஸ்க் தான் என்று அந்த அக்கௌன்ட்டில் இருந்து பேசிய நபர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
நம்ப மறுத்த பெண்ணிடம், எலான் மஸ்க் அலுவலகத்தில் இருந்து புகைப்படங்களை (photos) அனுப்புவது போன்ற சில படங்களை அந்த பெண்ணுடன் பகிர்ந்திருக்கிறார். பிறகு, எலான் மஸ்கின் குழந்தைகளின் பெயர்களை கூறி, அவர்களுடன் விளையாடி கொண்டிருப்பதாகவும் சில பொய்களை AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை (AI created elon musk images) கொண்டு அந்த பெண்ணை நம்ப வைத்திருக்கிறார்.
சில மாதங்களில் இந்த பெண்ணும் உண்மையான எலான் மஸ்க் தான் தன்னுடன் பேசுவதாக நம்பிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு மேற்கொண்டு "ஐ லவ் யூ" சொன்னதாகவும் அந்த பெண் தென்கொரிய டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ கால் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இறுதியாக, எலான் மஸ்க் தன்னுடன் நெருக்கமானவர்களையும் பணக்காரர்களாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இதற்காக, அந்த பெண்ணிடம் இருந்து ஒரு முறை மட்டும் 50,000 டாலர் தொகையை ஒரு கொரியன் வங்கி கணக்கில் போடச் சொல்லியிருக்கிறார் போலி எலான் மஸ்க். இதை நம்பி அந்த பெண்ணும் தொகை டெபாசிட் செய்ய, இன்ஸ்டாகிராம் வழியாக வந்த எலான் மஸ்க் ராக்கெட் வேகத்தில் மறைந்துவிட்டார். அப்போது தான் இந்த பெண் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதையே உணர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications








