ஒரே உடலில் 68 ஐபோன்.. பங்கமாக சிக்கிய 'குருவி'.. சீனாவில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..
ஐபோன் (iPhone) சந்தானத்திற்கு உலகளவில் அதிக மவுசு இருக்கிறது. இது நம் அனைவரும் அறிந்த ஒரு உண்மையே. ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்த சாதனமாக திகழ்கின்றன. குறைந்த விலையில் ஐபோனை வாங்க மக்கள் பெரும்பாலும் பிளாக் மார்க்கெட்டையே நாடுகிறார்கள்.
இப்படி பிளாக் மார்க்கெட்டை நாடும் மக்களுக்காவே சில 'குருவி'கள் வெளிநாடுகளில் இருந்து புதிய ஐபோன் மாடல்களை திருட்டு தனமாக மற்ற நாடுகளுக்குள் கொண்டு சென்று குறைந்த விலையில் விற்பனை செய்துவிடுகிறார்கள். குருவி என்றால், ஒரு பொருள் திருட்டுத்தனமாக கடத்தல் செய்து, அதை பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்ய உதவும் ஆட்களாகும்.

உதாரணமாக, குருவி என்ற திரைப்படத்தில், இளைய தளபதி விஜய் அவர்கள் வெளிநாடு சென்று பொருட்களை கடத்தும் குருவியாகவே நடித்திருப்பார். இப்படி ஒரு துணிச்சலான ஒரு காரியத்தை, ஒரு நபர் செய்து இப்போது மாட்டிக்கொண்ட விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மிகவும் துணிச்சலான ஒரு குருவியாக செயல்பட நினைந்த ஒரு நபர், குயிங்டாவோ துறைமுகம் வழியாக மொத்தம் 68 ஐபோன்களை சீனாவிற்குள் ஊடுருவ முயன்றிருக்கிறார்.
ஆனால், அவருடைய பொல்லாத நேரமோ என்னமோ.. 68 ஐபோன் மாடல்களை தனது உடலில் டேப் செய்து, மறைத்து சென்ற குருவி, சீனாவின் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 31 அன்று இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஒரு நபர் தனது பல்வேறு உடல் பாகங்களில் 68 ஐபோன்களை டேப் செய்து, அவற்றை பிளாக் மார்க்கெட்டிற்குள் விற்கக்கூடிய நிலப்பகுதிக்கு கடத்த முயன்றிருக்கிறார்.
இந்த நபரின் சில நடத்தைகள், சுங்க அதிகாரிகளிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விரைவாக நடவடிக்கையில் குதித்து சந்தேக நபரை நெருக்கமான ஆய்வுக்கு அழைத்துச் சென்றனர். நெருக்கமான விசாரணையில், அவரிடமிருந்து 68 ஐபோன்கள் அவரது உடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவரது கால்கள், வயிறு மற்றும் இடுப்பு உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் ஐபோன்கள் டேப் செய்யப்பட்டன. அவை ஒரு க்ளூ டேப்பைப் பயன்படுத்தி ஒட்டப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டனர். அவரது கடத்தலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெரியவில்லை என்றாலும், அந்த நபர் இப்போது கடத்தல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஒருவர் ஐபோன்களை கடத்த முயற்சிப்பது இது முதல் முறையல்ல. ஆப்பிள் போன்களுக்கு பிளாக் மற்றும் கிரெய் சந்தையில் அதிக தேவை உள்ளது. அதனால் தான் கடந்த காலங்களில் பல வழக்குகள் ஐபோன் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு, 102 ஐபோன்களை தனது ஆடைகளுக்கு அடியில் மறைத்துக்கொண்டு நாட்டிற்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வழக்கு கடத்த 2015 இல் வெளிச்சத்திற்கு வந்தது, அதில் 90 க்கும் மேற்பட்ட ஐபோன்களை தனது உடலில் ஒட்டிக்கொண்டு கடத்தல் முயற்சியில் களமிறங்கிய ஒரு நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஐபோன்களுக்கான அதிக கிராக்கியானது சாதனங்களுக்கான ஒரு செழிப்பான பிளாக் மார்க்கெட் சந்தைக்கு வழிவகுத்துள்ளது.
ஐபோன்கள் உத்தியோகபூர்வ கடைகளில் இருப்பதை விட பிளாக் மார்க்கெட் சந்தையில் அதிக பணத்திற்கு விற்கப்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் ஐபோன்கள் தடை செய்யப்பட்ட பொருளாக இருக்கின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டில், சீனாவில் குற்றவாளிகள் குழு $79.8 மில்லியன் மதிப்பிலான புதுப்பிக்கப்பட்ட ஐபோன்களை கடத்தியதில் பிடிபட்டது.
கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி ஹாங்காங்கில் இருந்து ஷென்செனுக்கு ஸ்மார்ட்போன்களை கடத்தி சென்ற சம்பவம் கூட பதிவாகியுள்ளது. சில அறிக்கையின் படி, ஷென்சென் சுங்க அதிகாரிகள் குழு மொத்தம் 26 சந்தேக நபர்களை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








