மாற்றம் ஒன்றே மாறாதது: 2020 இல் இவ்வளவு மாற்றம் கண்டோமா: ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியும் நாம் கண்ட புதுமையும்!
ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களில் புதுமையை புகுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பிலும், ஒட்டுமொத்த செயல்திறனிலும் பல மேம்பாடுகளை கண்டு வருகிறோம். வழக்கமான ஆண்டுகளை போல் இந்தாண்டு இல்லை என்றாலும் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியில் முன்னேற்றத்திற்கான பங்களிப்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி இந்தாண்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள், வடிவமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சிப்செட்கள் உள்ளிட்டவைகள் குறித்து பார்க்கலாம்.

அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்
2019 ஆம் ஆண்டே ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன என்றாலும், இந்தாண்டுதான் மேம்பட்ட கீல் வழிமுறைகளுடன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் பிரபலமடைந்தது. இதில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2, ஹூவாய் மேட் எக்ஸ், மைக்ரோசாப்ட் சர்பேஸ் டியோ மற்றும் எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ போன்ற ஸ்மார்ட்போன்கள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் சிறந்தவையாக இருந்தது. அதேபோல் ஃபோல்டபிளுக்கு பதிலாக பிளிப் ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் மோட்டோ ரேஸர் 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விரைவில் குறைந்த விலையில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்
தற்போது வரை கிடைக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களும், பிளிப் ஸ்மார்ட்போன்களும் முன்னணி ரக விலையிலேயே உள்ளன. இருப்பினும் விரைவில் சியோமி, விவோ, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் வரிசைக்கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சுழல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்
ஃபோல்டபிள் மாடல், பிளிப் மாடல் ஆகியவை நாம் அறிந்ததே ஆனால் எல்ஜி புதுவித மாடலை இந்தாண்டு அறிமுகம் செய்தது. அது எல்ஜி விங் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் சுழல் டிஸ்ப்ளே இடம்பெற்றிருந்தது. இதன் மேற்புற டிஸ்ப்ளேவை சுழற்றி டி வடிவத்தில் வைத்து பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு டிஸ்ப்ளேகள் உள்ளன. இந்த இரண்டு டிஸ்ப்ளேகளிலும் வெவ்வேறு பயன்பாடுகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த சுழல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பெற்று இந்த மாடல்களின் அறிமுகம் தொடரும் என கூறப்படுகிறது.

கேமரா தொழில்நுட்பத்தில் அடைந்த முன்னேற்றம்
ஸ்மார்ட்போன்கள் எனும்போது நாம் முதலில் கவனிப்பது கேமரா தொழில்நுட்பத்தை தான். கேமரா சென்சார்களும் அதன் மெகாபிக்சலும் தொடர்ந்து அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா மற்றும் சியோமி எம் 10 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 108 எம்பி சென்சார் உடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களை கொண்டு வெளிவந்தது. இந்த தொழில்நுட்பங்களானது 100 எக்ஸ் ஜூம் மூலம் மேம்பாடு வசதி பெற்றது. அதோடு பெரும்பாலான இடைநிலை ஸ்மார்ட்போன்களில் 64 எம்பி கேமராக்களே பொருத்தப்பட்டிருந்தன. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2020-ல் கேமரா மெகாபிக்சலுக்கான அளவுகோள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

லிடார் சென்சார் அம்சம்
ஐபோன் 12 தொடரில் லிடார் சென்சார் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. லிடார் சென்சார் குறைந்த ஒளியிலும் புகைப்படத்தை மேம்படுத்த உதவும். ஆப்பிள் முதன்மை ரக சாதனத்தில் லிடார் சென்சார் ஏஆர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.

அதிகளவு ஊக்கம் பெற்ற ஏஆர் தொழில்நுட்பம்
ஆக்மென்ட் ரியாலிட்டி இந்தாண்டு அதிகளவிலான ஊக்கத்தை பெற்றது என்றே கூறலாம். இதை கருத்தில் கொண்டே ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் லிடார் சென்சாரை கொண்டு வந்தது. ஆப்பிள் மட்டுமின்றி பிற டெவலப்பர்களும் ஏஆர் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பிரதான பயன்பாடாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்கள்
ஏஆர் தொழில்நுட்பத்தை போன்றே இந்தாண்டு ஏஐ திறன்கள் அமோக முன்னேற்றம் அடைந்துள்ளது. மொபைல் தேடுபொறி பயன்பாடுகளில் 20 சதவீதம் குரல் தேடல்கள் மூலமாகவே செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் பயனர்களின் இந்த தேவையை பூரத்தி செய்யும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களும் பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டனை கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

5ஜி அம்சங்களோடு வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்
2020 ஆம் ஆண்டில் 5ஜி அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்தியாவில் 5ஜி இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பாளர்கள் எதிர்கால அம்சத்தை கருத்தில் கொண்டு 5ஜி ஆதரவோடு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பிரத்யேக செயலிகள்
2020 ஆம் ஆண்டை கொரோனா தொற்று பரவல் மறக்கமுடியாத ஆண்டாகவே மாற்றியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ப்ளூடுத் மூலம் செயல்படும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப வசதி
ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து பல்வேறு கேம்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஏணையோர் தங்களது நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கேம்கள் விளையாடுவதில் செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கின்போது ஏராளமானோர் தங்களது பெரும்பாலான நேரத்தை மொபைல்கேம் விளையாடுவதில்தான் செலவிட்டனர். தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடும் போது சாதனம் அதிகளவு வெப்பமடையும். அந்த வெப்பநிலையை கட்டுக்குள் வைக்கவே திரவ குளிரூட்டும் தொழில்நுட்பம் (Liquid Cooling Technology) பயன்படுத்தப்படுகிறது. ஆசஸ் ROG, Xiaomi Black Shark போன்ற சாதனங்களில் மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன.

சிப்செட் தொழில்நுட்பத்தில் அடைந்த முன்னேற்றம்
இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் கண்ட மற்றொரு தீவிர வளர்ச்சியானது சிப்செட் அம்சமாகும். ஐபோன் 12 சீரிஸில் புதிய ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் செயலிகள் பயன்படுத்தப்பட்டது. இதேபோல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி அடுத்துவரும் பல ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட மொபைல் பாதுகாப்பு, தனியுரிமை
2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டுமே தனியுரிமைக் கொள்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக Android 11 புதுப்பிப்பு பல மாற்றங்களை கொண்டு வந்தது என்றே கூறலாம். ஸ்மார்ட்போன் பயனர்களின் முக்கிய கவலை அதில் இருக்கும் தரவுகளின் பாதுகாப்பே ஆகும். இதை கருத்தில் கொண்டு பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

2021 ஆம் ஆண்டில் காணும் முன்னேற்றம்
இவை அனைத்தும் 2020 ஆம் ஆண்டு நாம் ஸ்மார்ட்போன்கள் துறையில் கண்ட முன்னேற்றமே ஆகும். இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் பல முன்னேற்றங்களை நாம் காண இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு புதுமைகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்து வருகின்றன. இதில் வரும் ஆண்டில் என்னென்ன வரப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








