வாங்கி 6 மாசம் கூட ஆகலை.. iPhone 14 Pro-வில் அதுக்குள்ள பேட்டரி வீக்கமா? தொடரும் டிஸ்பிளே பிளவு புகார்கள்!
ஆப்பிள் வரிசையில் மிகவும் பிரபலமான ஐபோன் மாடலாக ஐபோன் 13 வரிசை மற்றும் சமீபத்திய ஐபோன் 14 வரிசை பார்க்கப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக இந்த ஐபோன்களில் பேட்டரி வீக்கச் சிக்கல் எழதுவங்கியுள்ளதாக புகார்கள் பதிவாகி வருகிறது.
ஐபோன் 13 (iPhone 13) மற்றும் ஐபோன் 14 (iPhone 14) மாடல்களின் ப்ரோ வேரியண்ட் மாடல்களில் கூட இந்த சிக்கல்கள் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாங்கிய ஆறு மாதங்களுக்குள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ப்ரோவில் கடுமையான பேட்டரி வீக்கச் சிக்கல்கள் பதிவாகியுள்ளன. சமீபத்தில், சில ஐபோன் பயனர்கள் கடுமையான பேட்டரி வீக்கம் சிக்கல்களைப் பற்றி இணையத்தில் புகாரளித்தனர்.

குறிப்பாக ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள பேட்டரிகளின் தரம் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பயனர்கள் தங்கள் சாதனங்களை சாதாரணமாகப் பயன்படுத்தினாலும், இந்தச் சிக்கல் எழுந்ததாகக் கூறி புகாரளித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில், ஐபோன் 14 ப்ரோவை வாங்கிய பயனர், ப்ரோ மாடலில் கூட பேட்டரி தரப் பிரச்சினை இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் பேட்டரி வீக்கச் சிக்கல் மிகவும் கடுமையானது. இது போனின் டிஸ்பிளேவை திறக்கச் செய்து, டிஸ்பிளே பிளவை உருவாக்குகிறது. இதனால், போனின் டிஸ்பிளே பேனலும் பாதிக்கப்படுகிறது. இந்த சிக்கல் குறித்து ஆப்பிள் வாடிக்கையாளர் ஆதரவு பொறுப்பான அணுகுமுறையுடன் சிக்கலைத் தீர்க்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. பயனர் ஆப்பிளின் தொழில்நுட்ப ஆதரவை மூன்று முறை அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த பேட்டரி பிரச்சினை உண்மையில் ஒரு தரம் தொடர்பான பிரச்சனை என்று நிரூபிக்கப்பட்டால், சாதனத்தை மாற்றுவதாக ஆப்பிளின் மூத்த ஆலோசகர் ஒருவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி வாக்குறுதியை அவரும் மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. பேட்டரி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பயனர்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட iPhone 14 Pro இன் டிஸ்பிளே பிளவை கொண்டிருப்பதை காட்டுகிறது.

இது பேட்டரி வீங்கியதன் காரணமாக டிஸ்பிளே பிளவு ஏற்பட்டுள்ளதை படங்கள் தெளிவாக காண்பிக்கிறது. ஐபோன் 14 ப்ரோவிலும் இதே சிக்கல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர்கள் தங்கள் சாதனங்களை ஆப்பிளின் வாடிக்கையாளர் ஆதரவுக்கு அனுப்பியபோது, நிறுவனம் புகார்களை நிராகரித்து சாதனங்களை திருப்பி அனுப்பியுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, திரும்பி வந்த சாதனங்களில் பேட்டரி வீக்கம் பிரச்சினை மறைந்துவிட்டது.
ஆனால் பேட்டரி "அன்நோன் காம்பொனன்ட் (unknown component)" எனக் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்பிள் பழுதுபார்ப்பை ஒப்புக் கொள்ளாமல் அசல் பேட்டரியை மாற்றியதாக பயனர்கள் சந்தேகிக்கின்றனர். இதற்கான காரணமாக பயனர்கள் தங்கள் ஐபோனை அதிக வெப்பநிலை சூழலில் வைத்திருந்ததாலோ அல்லது அதிக வெப்பநிலையில் சார்ஜ் செய்வதாலோ பேட்டரி வீக்க பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனைகளின் மூலக் காரணத்தையும், அவை உண்மையில் உற்பத்திக் குறைபாடுகள் தானா என்பதை ஆப்பிள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை இது பயனர் பழக்கவழக்கங்களால் ஏற்பட்டதா என்பதையும் கண்டறிய மேலும் விசாரணை தேவை என்று நிறுவனம் நினைக்கிறது.


Click it and Unblock the Notifications








