உஷார்.. மக்களே.. உஷார்.. கோயில்களில் QR Code மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்!
நீங்கள் கோயில்களுக்கு செல்லும்போது, அங்கு யாரேனும் உங்களிடம் கியூஆர் கோட் மூலம் நன்கொடை கேட்டாலோ அல்லது கோயில் வளாகத்தில் காணிக்கைகாக பயன்படுத்தவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கியூஆர் கோட் (QR Code) போஸ்டர்களை பார்த்தாலோ அதில் பணம் செலுத்த முயற்சிப்பதை அப்படியே மறந்துவிடுங்கள்.
இப்போது மோசடி கும்பல்கள் கியூஆர் கோட் மூலம் கோயில்களிலும் பணம் திருட ஆம்பித்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ. டிஜிட்டல் வருகையால் கையில் பணம் வைத்துக் கொண்டு செலவு செய்து வந்த காலம் மலையேறி போய்விட்டது. எங்கு பார்த்தாலும் மொபைல் போன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையே பயன்படுத்தப்படுகிறது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வெளியில் சென்று எதையாவது வாங்க வேண்டும் என்றால், ஏடிஎம்களுக்கு சென்று பணத்தை எடுத்து வர வேண்டியதில்லை. அந்தந்த கடைகளிலேயே இருக்கும் கியூஆர் கோட்களை ஸ்கேன் செய்தால் மட்டுமே போதும், உடனடியாக பணத்தை கொடுத்துவிட்டு பொருள்களை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம்.
இந்த டிஜிட்டல் முறை மிகவும் எளிதாக இருப்பதால், அதில் ஆபத்தும் அடங்கியிருக்கிறது. சைபர் கிரைம் கும்பல்கள் புதுப்புது டிசைன்களில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. அப்படி போலியான கியூஆர் கோட்கள் மூலமும் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது, மக்கள் அதிகமாக கூடும் கடைகளில் உரிமையாளர்களால் ஒட்டப்படும் கியூஆர் கோட் போஸ்டர்களை யாருக்கும் தெரியாமல் கிழித்துவிட்டு, அதில் வேறொரு கியூஆர் கோட் போஸ்டரையொட்டி பண மோசடியில் ஈடுபடுவது.
நன்கொடை, மருத்துவ செலவு என்ற பெயரில் கியூஆர் கோட்களை வைத்துக் கொண்டு சாலையில் செல்வோர்களை வழிமறித்து பணம் கேட்பது உள்ளிட்ட பல ஐடியாக்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற கும்பல்கள் இப்போது கோயில்களிலும் தங்களது கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டது. அதுவும் பிரபல பத்ரிநாத் கேதார்நாத் கோயில்களில் கியூஆர் கோட் மூலம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோயில்களில் யாத்திரை சீசன் தொடங்கிவிட்டது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பக்தர்கள் கோயில்களில் உள்ள உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். அப்படி கோயில்களுக்கு நாள்தோறும் பல லட்ச ரூபாய் வரை காணிக்கையாக கிடைக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் கோயில்களின் 5 வெவ்வேறு இடங்களில் புதிதாக கியூஆர் கோட் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் கோயிலுக்கு காணிக்கை அல்லது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் மூலமும் செலுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பணம் செலுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள்.
இதைப் பார்த்த கோயில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் முறையை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அதன்பின் விசாரிக்கையில், யாரோ பணத்தை திருடும் நோக்குடன் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த கியூஆர் கோட் போஸ்டர்களை அப்புறப்படுத்தி, உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. மேலும் கோயில் நிர்வாகத்தினர், கியூஆர் கோட் மூலம் யாரும் காணிக்கையோ நன்கொடையோ செலுத்த வேண்டாம். வழக்கமாக உண்டியல்களிலேயே செலுத்திக்கொள்ளலாம் என்று பக்தர்களுக்கு அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








