SBI வாடிக்கையாளர்களுக்கு வந்த மெசேஜ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆபத்தா? முழு விவரம் இதோ..
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது 'Siriusim' என்ற பெயரில் செயல்படும் ஹேக்கர் அல்லது மோசடி குழு, எஸ்பிஐ வங்கியுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களை கசியவிட்டதாக 'CyberPulse' என்ற சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக டார்க் வெப்பில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் விவரங்கள், கடன் விண்ணப்பங்கள், புதிய கணக்கு தொடங்குவதற்கான படிவங்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்கள் தொடர்பாக ஆரம்பக்கட்டமாக ஆய்வு செய்ததில் சுமார் 3.75 லட்சம் பதிவுகளில், 3,897 வாடிக்கையாளர்களை அடையாளம் காணக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் இருந்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வீட்டின் முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கிக் கிளை தொடர்பான தகவல்கள் மற்றும் கடன் பதிவுகளுக்கான விவரங்களும் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் தரவு கசிவில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும், அவர்களின் வங்கிக் கணக்குகள், கணக்கு இருப்பு மற்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை எக்ஸ் சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளது எஸ்பிஐ.
இந்தச் சம்பவத்தால் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தகவல்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் நிதி நிலைத்தன்மைக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், கசிந்த தகவல்களின் உண்மைத்தன்மையையும் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் ஆய்வு செய்ய CERT-In அங்கீகரித்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக எஸ்பிஐ வங்கி தரப்பில் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இணையவழி நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக, வங்கிக் கணக்கு தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்களது OTP, ATM PIN, இணைய வங்கிச் சேவை கடவுச்சொல் உள்ளிட்ட ரகசிய விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது. வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி யாராவது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டாலும், அவர்களை உடனடியாக நம்பிவிட வேண்டாம். மோசடி நபர்கள் வங்கி அதிகாரிகளைப் போலப் பேசி பணத்தைப் பறிக்க முயற்சி செய்யலாம்.

அதேபோல், KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும், வங்கிக் கணக்கு முடக்கப்பட உள்ளது அல்லது கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனக் கூறி வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெரியாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளைத் திறப்பதையும், சந்தேகத்திற்குரிய செயலிகளைப் பதிவிறக்குவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து சரிபார்ப்பது நல்லது. தாங்கள் மேற்கொள்ளாத பரிவர்த்தனைகள் ஏதேனும் இருப்பது தெரியவந்தால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதுடன், சந்தேகத்திற்குரிய அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு எச்சரிக்கையாகச் செயல்படுவது நிதி மோசடிகளைத் தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications
