SBI வெளியிட்ட எச்சரிக்கை டிப்ஸ்.. அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி.. பாதுகாப்பாக இருக்க இதை செய்யுங்கள்..
ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் திருட்டு, போன் மூலம் பண மோசடி போன்ற சைபர் தாக்குதல்கள் தற்பொழுது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களின் பணத்தை மர்ம கும்பல்களிடம் இழந்து வருகின்றனர். இதுபோன்ற மோசடி தாக்குதல்களில் இருந்து மக்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று SBI வங்கி சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதில் SBI வங்கி என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - SBI வெளியிட்ட எச்சரிக்கை டிப்ஸ் என்ன?
கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் தங்கி இருக்கும் நிலை உருவானது. ஊரடங்கு காரணமாக மக்கள் வங்கி செல்லாமல், அவர்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப் பழகிக்கொண்டனர். இதனால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்தது. மக்கள் வங்கியின் நெட் பேங்கிங் சேவை போக, கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை சேவைகளையும் அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

'இந்த' பயனர்களைக் குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்
பெரும்பாலான பயனர்களின் பரிவர்த்தனைகள் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலமாகவே நடைபெறுகிறது. இதனைக் கண்காணித்த ஹேக்கர்கள், தற்பொழுது இந்த பயனர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தி, அவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சூறையாடி வருகின்றனர். ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பயனர்களின் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை மறைமுகமாகத் திருடி, பணத்திருட்டில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பேங்கிங் பாதுகாப்பு மீது மக்கள் அவநம்பிக்கை
இதனால், மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பேங்கிங் பாதுகாப்பு குறித்த புதிய அவநம்பிக்கை உருவாகி வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையை மாற்றி அமைக்க மக்கள் கவனமாக இருந்தால் மட்டும் போதுமானது என்று SBI வங்கி தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் எப்படி சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை SBI தெளிவாக விளக்கியுள்ளது.

பெரும்பாலான சைபர் தாக்குதல் நடைபெறக் காரணம் இது தானா?
பெரும்பாலான சைபர் தாக்குதல் நடைபெறக் காரணமாக இருப்பது பயனர்களின் கவனக்குறைவு தான் என்று கூறப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கேம்கள் மற்றும் ஆப்ஸ்களை பொதுமக்கள் பொது சர்வர்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதே இது போன்ற தாக்குதல்களில் அவர்களைச் சிக்க வைக்கிறது என்று SBI கூறியுள்ளது. தவறான ஆப்ஸ்களின் உதவியுடன் ஹேக்கர்கள் உங்கள் போனிற்குள் நுழைந்து, உங்கள் வங்கி தகவல்களைத் திருடுகிறார்கள். பின்னர் அதை வைத்து பணத்தையும் திருடுகிறார்கள்.

போலி மெசேஜ்கள் மூலமாக வரும் ஹேக்கிங் லிங்க்
அதேபோல், வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து சில கவர்ச்சிகரமான சலுகை மெசேஜ்களை அனுப்பி, அவர்களின் ஹேக்கிங் வலைக்குள் மக்களைச் சிக்கவைக்கிறார்கள். பொதுவாக நம்ப முடியாத சலுகை மெசேஜ்களுடன் ஒரு லிங்க்-ஐ இணைத்து, அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லுமாறு ஹேக்கர்கள் போலியான மெசேஜ்களை அனுப்புகிறார்கள். சலுகை கிடைப்பதாக எண்ணி பயனர்கள் இதை கிளிக் செய்து, மோசடிக்கு காரர்களிடம் சிக்குகின்றனர். இதனால் ஏராளமானோர் பணத்தை இழக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதை சரியாக செய்தால் பயனர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்
சமீபத்தில் SBI வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஏராளமான சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து SBI வங்கி தனது பயனர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது எப்படி வைரசை வீழ்த்த உதவுகிறதோ, அதேபோல் அடிக்கடி பயனர்களின் பாஸ்வோர்டை மாற்றம் செய்வது பாதுகாப்பு அளிக்கும் என்று SBI தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இணைய வழி மோசடிகளில் இருந்து மக்கள் தப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

OTP மற்றும் வங்கியில் இருந்து வரும் அழைப்புகள் மீது கூடுதல் கவனம் தேவை
முன்-பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளையும், மெசேஜ்களையும் மற்றும் போலி லிங்குகளையும் மக்கள் தவிர்ப்பது நல்லது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது. தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்களைப் பகிர்வது, OTP மற்றும் பாஸ்வேர்டு போன்ற தகவல்களைக் கூறவேண்டாம் என்றும் SBI எச்சரித்துள்ளது. வங்கியில் இருந்து அழைப்பது போல் வரும் வாய்ஸ் கால்களை ஒரு போதும் நம்ப வேண்டாம் என்று SBI கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications