ஓட முடியாது.. ஒழிய முடியாது.. மொபைல்களில் கட்டாய ஆப்.. மக்களை கண்காணிக்க இந்திய அரசு திட்டமா? என்ன நடக்குது?
ஸ்மார்ட்போன்களில் கட்டாய ஆப் ஒன்றை கொண்டுவருவதன் மூலமாக ஒட்டுமொத்த மக்களையும் கண்காணிக்க வழிவகை செய்வதை இந்திய அரசு எடுத்துள்ள முடிவு காட்டுகிறது. ஆனால், சஞ்சார் சாத்தி ஆப் (Sanchar Saathi App) என்னவெல்லாம் செய்யும் என்பதை ஒட்டுமொத்த மக்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்புத் துறை கட்டப்பாட்டில் சஞ்சார் சாத்தி ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு ஒதுக்கப்படும் ஐஎம்இஐ (IMEI) நம்பரை கொடுத்தால் போதும், ஒருவரது போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

அதே நேரத்தில் அந்த போனை பிளாக் செய்து கொள்ளவும் முடியும். இது ஜிபிஎஸ் (GPS) அடிப்படையில் செயல்படுகிறது. ஆகவே, ஒருவரது போன் எங்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதை டிராக் செய்து கொள்ளலாம். இதுபோக ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்ட ஐஎம்இஐ உண்மையானதா அல்லது மாற்றியமைக்கப்பட்டதா என்பதை அறியலாம்.
மேலும், ஒருவரது பெயரில் எத்தனை மொபைல் கனெக்சன் இருக்கிறது. இன்டர்நேஷல் கால்கள் குறித்து புகார் அளிப்பது போன்ற பல்வேறு சேவைகளை இந்த ஆப் கொடுக்கிறது. இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முக்கியமானதாக இருப்பதை மறுக்க முடியாது. அதேபோல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசிடம் இருந்து சென்ற உத்தரவையும் எளிதாக கடந்துவிட முடியாது.
அதாவது, இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் ஒட்டுமொத்த நிறுவனங்களும், அதனுடைய புதிய ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி ஆப்பை ப்ரீ-லோட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதை 90 நாட்களில் அமல்படுத்தவும் காலக்கெடுவை இந்திய அரசு கொடுத்துள்ளது.
ப்ரீ-லோட் ஆப் என்பது ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யாமலேயே கட்டாயமாக இருக்கும். ஆகவே, ஒரு புதிய போனை வாங்கினால் அதில் பயனர் டவுன்லோட் செய்யாமலேயே இந்த சஞ்சார் சாத்தி ஆப் இருக்கப் போகிறது. இந்த ஆப் இருந்தால், ஜிபிஎஸ் மூலமாக ஒருவரது இருப்பிடத்தை கண்காணிக்க முடியும்.
அதே நேரத்தில் கால் ரெக்கார்ட்கள் மற்றும் டேட்டாக்களையும் அணுக முடியும். இதனாலேயே இப்போது தனியுரிமை குறித்த கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், சஞ்சார் சாத்தி ஆப்பில் ஐஎம்இஐ நம்பர் உள்ளிட்ட விவரங்களை ஸ்மார்ட்போன் யூசர்கள் கொடுக்கும் வரையில் ஜிபிஎஸ் டிராக் செய்ய முடியாது. இதுவே இப்போதைக்கு இருக்கும் நடைமுறையாகும்.
ஒருவேளை ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் அதை பூட் (Boot) செய்யும்போது இதற்கான அனுமதிகளை பயனர்கள் கொடுக்க வேண்டும் என்பதை இந்திய அரசு கொண்டுவந்தால் மட்டுமே, இது கேள்விக்குள்ளாகும் முயற்சியாக இருக்கும். ஆகவே, ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால், இந்திய அரசின் ஆப் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்றால் ஐஎம்இஐ நம்பரை அதில் கொடுக்கலாம்.
இல்லையென்றால், அதை தவிர்த்துவிடலாம். இப்போதைக்கு சஞ்சார் சாத்தி ஆப் புதிய ஸ்மார்ட்போன்களில் ப்ரீ-லோட் மட்டுமே செய்யப்பட இருக்கிறது. இதற்கு கொடுக்கப்படும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விவரங்களை பார்த்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். 90 நாட்களில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஆப்பை ப்ரீ-லோட் செய்ய இருக்கின்றன.
ஆகவே, மூன்று மாதங்களுக்குள் முழு விவரங்கள் தெரியவந்துவிடும். ப்ரீ-லோட் ஆப்பாக மட்டுமல்லாமல், இப்போதே இந்த சஞ்சார் சாத்தி ஆப்பை ஸ்மார்ட்போன்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 21 இந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது. அறிமுகமான 6 மாதத்தில் 50 லட்சம் டவுன்லோட்களை பெற்றுள்ளது.
ஜனவரியில் கொண்டுவரப்பட்டது. இந்த சஞ்சார் சாதி ஆப் மூலமாக கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 50,000 ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரையில் மொத்தமாக 7 லட்சத்துக்கும் அதிகமான தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications








