போச்சு போச்சு.. அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது Samsung ஸ்மார்ட் TV, பிரிட்ஜ், AC விற்பனை.. ஏன்?
சாம்சங் (Samsung) நிறுவனமானது சீனாவில் அதன் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீன சந்தையில் நுகர்வோர் மின்னணு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் சீன பிராண்டுகளின் அதிகரித்து வரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: "வேகமாக மாறிவரும் சந்தை நிலவரங்கள்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ சீன இணையதளம் தற்போது இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பை காட்டுகிறது. இருப்பினும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையும் வாடிக்கையாளர் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள், பிரிஜ்கள் மற்றும் பல - காலி: ஸ்மார்ட் டிவிகள், மானிட்டர்கள், பிரிஜ்கள், வாஷிங் மெஷின்கள், ட்ரையர்கள், ஏசிக்கள், வேக்வம் கிளீனர்ள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் உள்ளூர் விற்பனையை சீனாவில் சாம்சங் நிறுத்தவுள்ளது. மற்ற தயாரிப்புகள் மீதான இந்த பெரிய அளவிலான விற்பனை நிறுத்தம் இருந்தபோதிலும், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தொடர்ந்து வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் நிலை என்ன? அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வணிகமும் உள்நாட்டு சீன பிராண்டுகள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடததக்கது. 2010-களின் முற்பகுதியில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கிட்டத்தட்ட 20% பங்கை கொண்டிருந்தது, ஆனால் அதன் பங்கு தற்போது 1%-க்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
உற்பத்தி நிறுத்தப்படுமா? சீன பிராண்டுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன: சீன மின்னணு நிறுவனங்கள், போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்குவதோடு, தயாரிப்புகளின் தரத்தையும் வேகமாக மேம்படுத்தியுள்ளன. வேகமான புத்தாக்க சுழற்சிகள் மற்றும் வலுவான உள்நாட்டு பிராண்ட் விசுவாசம் ஆகியவை, இப்பகுதியில் சாம்சங் போட்டியிடுவதை மேலும் கடினமாக்கியுள்ளன. வெளிநாட்டு சந்தைகளுக்காக அந்நிறுவனம் சீனாவில் டிவைஸ்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதால், சீனாவில் சாம்சங்கின் உற்பத்தி பணிகள் தொடரும்.
ஏஐ மற்றும் செமி-கான்டெக்டர்களில் அதிக கவனம்: சீனாவின் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறும் அதே வேளையில், சாம்சங் தனது செமி-கான்டெக்டர் வணிகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மெமரி சிப்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சாம்சங் 133.87 டிரில்லியன் வோன் வருவாயையும், 57.23 டிரில்லியன் வோன் இயக்க லாபத்தையும் பதிவு செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, அதன் செமி-கான்டெக்டர் பிரிவு மட்டுமே சாம்சங் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 61% பங்களித்துள்ளது.
புது டிவி இறக்கிய வேகத்தில்: சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் தான் தனது 2026 மினி எல்இடி டிவி சீரீஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் - புதிய விஷன் ஏஐ (Vision AI) தொழில்நுட்ப அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பிக்சர் ப்ராஸஸிங் மற்றும் பிக் ஸ்க்ரீன் விருப்பங்களை கொண்டு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் சீரீஸின் கீழ் 43-இன்ச் முதல் 100-இன்ச் வரையிலான மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 43-இன்ச் மாடலின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் 43 இன்ச் 2026 மினி எல்இடி டிவி மாடலின் விலை ரூ.42,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications