Samsung ஆல் செட்! இன்று நடக்கும் Galaxy Unpacked 2025 நிகழ்வை LIVE ஆக பார்ப்பது எப்படி? என்னென்ன அறிமுகமாகும்?
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) நிகழ்வானது இன்று (ஜூலை 9 ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது, தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் புதிய போல்ட் மற்றும் பிளிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்னென்ன மாடல்கள்? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025-ன் நேரடி ஒளிபரப்பை (Samsung Galaxy Unpacked 2025 Live) ஆன்லைனில் பார்ப்பது எப்படி? சாம்சங் நிறுவனத்தின் இந்த வெளியீட்டு நிகழ்வானது, இந்திய நேரடிப்படி ஜூலை 9 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெறும் இந்நிகழ்வானது சாம்சங் வலைத்தளம், சாம்சங்கின் சமூக ஊடக அக்கவுண்ட்கள் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் (Samsung Galaxy Unpacked 2025 What to Expect) என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம்? முக்கிய அறிமுகமான - இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்ட் மற்றும் பிளிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். இந்த பட்டியலில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகிய 2 மாடல்களும் நிச்சயம் இடம்பெறும்.
கூடவே கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஃபேன் எடிஷன் ஆக இருக்கும்; ஒப்பீட்டளவில் மலிவான விலை நிர்ணயம் கொண்ட பிளாக்ஷிப் பிளிப் ஸ்மார்ட்போனாக இருக்கலாம். இதோடு சேர்த்து சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனும் காட்சிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் மொத்தம் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (குறைந்தது 2 மாடல்கள் நிச்சயம் அறிமுகமாகும்). புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி வாட்ச் 8 சீரீஸும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 மற்றும் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். கிளாசிக் வேரியண்ட் ஆனது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படாமல் விடுபட்ட பிறகு மீண்டும் வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவின் "வாரிசும்" அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டிப்ஸ்டர் அர்சீன் லூபின் (@MysteryLupin) வழியாக கிடைத்த விவரங்களின்படி கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மாடல் ஆனது 3 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1ஜிபி ஸ்டோரேஜ். இது கோரல் ரெட், ப்ளூ ஷேடோ, ஜெட் பிளாக் மற்றும் சில்வர் ஷேடோ ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 ஆப்ஷன்களில் வெளியிடப்படும். இது ப்ளூ ஷேடோ, ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ மாடல் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். சாம்சங் நிறுவனத்தின் இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








