Samsung-ன் மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வு.. OnePlus, Google-ஐ வச்சி செய்ய போகும் 4 புதிய அறிமுகம்!
இந்தாண்டு சாம்சங் (Samsung) நிறுவனமானது, ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் கூகுளை (Google) துவம்சம் செய்ய வேண்டும் என்கிற முடிவோடு இருக்கிறது போல. ஏனென்றால் சாம்சங்கின் மிகப்பெரிய வருடாந்திர வெளியீட்டு நிகழ்வான கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) ஆனது இந்தாண்டு சற்றே முன்னதாக நடைபெற உள்ளது.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2023 (Samsung Galaxy Unpacked 2023) நிகழ்வானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பதிலாக ஜூலை மாதமே நடைபெறும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கம் போல, இந்தாண்டு நடக்கும் அன்பேக்டு நிகழ்விலும் சாம்சங்கின் முக்கிய தயாரிப்புகள் அறிமுகமாக உள்ளன.

குறிப்பாக ஒன்பிளஸ் மற்றும் கூகுளுக்கு கடும் போட்டியை அளிக்கும் தயாரிப்புகள் அறிமுகமாக உள்ளன. அன்பேக்டு 2023 நிகழ்வின் போது சாம்சங்கின் அடுத்த தலைமுறை ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் போன்களாக சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஏற்கனவே அறிமுகமாகி விட்ட கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட்டை (Google Pixel Fold) மட்டுமின்றி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனுக்கும் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அன்பேக்டு 2023 நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 உடன் சேர்த்து சாம்சங்கின் அடுத்த ஜெனரேஷன் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லெட்டும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங்கின் புதிய டேப்லெட் ஆனது சமீபத்தில் அறிமுகமான கூகுள் பிக்சல் டேப்லெட்டை (Google Pixel Tablet) பதம் பார்க்கலாம்!
இப்படியாக ஒன்பிளஸ் மற்றும் கூகுளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கப்போகும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வானது தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடக்கும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நிகழ்வு சரியாக எப்போது நடக்கும் என்கிற தேதி அறிவிக்கப்படவில்லை; விரைவில் அதுவும் அறிவிக்கப்படலாம்.
மேலும் சாம்சங் நிறுவனம் வரவிருக்கும் டிவைஸ்களை பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை, இருப்பினும் அதன் அடுத்த ஃபோல்டபிள் சீரீஸ் ஆனது "பல வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும்" என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் போன்களின் முன்னோடி சாம்சங் தான் என்றாலும் கூட, பெரும்பாலான நிறுவனங்கள் தத்தம் சொந்த ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் போன்களை அறிமுகம் செய்ய தொடங்கி உள்ளதால், சாம்சங் நிறுவனமானது மிகச்சிறந்த ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் போன்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னனரே குறிப்பிட்டபடி கூகுள் அதன் பிக்சல் ஃபோல்ட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தி விட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெக்னோ (Tecno) நிறுவனம் மிகவும் மலிவான விலைக்கு அதன் ஃபாண்டம் வி ஃபோல்ட் (Phantom V Fold) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது; இதன் விலை ரூ.88,888 ஆகும்.
சமீபத்தில், மோட்டோரோலா நிறுவனம் அதன் ரேஸர் 40 (Razr 40) மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra) ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இவ்விரு போன்களும் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. போதாக்குறைக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபிள் போனை இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








