எலான் மஸ்க்கிற்கு போட்டியாக சாம் ஆல்ட்மேன் தொடங்கும் புது நிறுவனம்.. மூளை தொழில்நுட்பத்தின் புதிய புரட்சி..
சாட்ஜிபிடியை (ChatGPT) உருவாக்கிய ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இவர் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப வசதிகளும் உலகில் பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் சாம் ஆல்ட்மேன் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது எலான் மஸ்கின் நியூரலிங்க் (Neuralink) நிறுவனத்திற்கு நேரடியாக சவால் விடும் வகையில் மெர்ஜ் லேப்ஸ் (Merge Labs) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்க உள்ளார் சாம் ஆல்ட்மேன். குறிப்பாக மெர்ஜ் லேப்ஸ் நிறுவனம் ஆனது எலான் மஸ்கின் நியூரலிங்குக்கு போட்டியாக மூளை-கணினி இடைமுக தொழில்நுட்பத்தில் களமிறங்குகிறது.

மெர்ஜ் லேப்ஸ் எதற்காக உருவாக்கப்படுகிறது?
சாம் ஆர்ட்மேல் டூல்ஸ் ஃபார் ஹியுமானிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் பிளானியாவுடன் இணைந்து மெர்ஜ் லேப்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். அதுவும் இந்த ஸ்டார்ட்அப் ஆனது மனித மூளையை நேரடியாக டிஜிட்டல் சாதனங்களுடன் இணைக்கும் மூளை-கணினி இடைமுக (Brain-Computer Interface - BCI) தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.
அதேபோல் இந்த புதிய நிறுவனத்திற்கு நிதி திரட்டல் தற்போது ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இந்நிறுவனம் சுமார் 850 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நியூரலிங்க் நிறுவனத்துக்குப் போட்டி: கடந்த 2016-ம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கிய நியூரலிங்க் நிறுவனம் ஏற்கனவே மூளை கணினி தொழில்நுட்பத்தில் பல சாதனைகளை எட்டியுள்ளது. அதுவும் பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவ சோதனைகளை நியூரலிங்க் நடத்தி வருகிறது. மேலும் நோயாளிகளின் தங்கள் எண்ணங்கள் மூலம் கணினி மற்றும் பிற சாதனங்களை கட்டுப்படுத்த இது உதவுகிறது.
அதேபோல் நியூரலிங்க் நிறுவனம் தற்போது 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் 600 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது. மெர்ஜ் லேப்ஸ் வெற்றி பெற்றால், அது நியூரலிங்குக்கு நேரடி போட்டியாளராக மாறும் என்றே கூறலாம்.
எலான் மஸ்க மற்றும் சாம் ஆல்ட்மேன் இடையேயான போட்டி பல காலமாக இருந்து வருகிறது. அதாவது மஸ்க், ஓப்பன்ஏஐ நிறுவனத்தை இணைந்து நிறுவியவர்களில் ஒருவர். ஆனால் நிறுவனத்தின் எதிர்கால பார்வை குறித்த கருத்து வேறுபாடுகளில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறினார். அதன்பின்பு இருவரும் பலமுறை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது எலான் மஸ்க்கின் மூளை தொழில்நுட்பத் துறைக்குள் ஆல்ட்மேன் நேரடியாக நுழைந்திருப்பதால், இந்த போட்டி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒருவேளை சாம் ஆல்ட்மேன் அவர்களின் மெர்ஜ் லேப்ஸ் நிறுவனம் வெற்றிபெற்றால், அது உலகில் உள்ள மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை முற்றிலும் மாற்றியமைக்கலாம். இதுதவிர நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஒரு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இது AI மற்றும் உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் இருவருக்கும் உள்ள இந்த போட்டியானது மனித அறிவுக்கும் இயந்திரங்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை எவ்வாறு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதை உலக மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். மேலும் சாம் ஆல்ட்மேன் உருவாக்கும் புதிய மெர்ஜ் லேப்ஸ் நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: Reuters, mashable, financialexpress


Click it and Unblock the Notifications