காலியானது காண்டு பறவை.. சப்ப காரணத்துக்காக Google பிளே ஸ்டோரில் இருந்து ஆங்ரி பேர்ட்ஸ் கேம் நீக்கம்!
ஒரு சில கேம்கள் மட்டுமே சிறியவர், பெரியவர் என்று வித்தியாசம் பாராமல் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றும். அப்படியான ஒரு மொபைல் வீடியோ கேமான - ஆங்ரி பேர்ட்ஸ் கிளாசிக் (Angry Birds Classic), கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கையின் விளைவாக, குறிப்பிட்ட கேமை டவுன்லோட் செய்ய விரும்பும் ஆண்ட்ராய்டு பயனர்களால் இனிமேல் (அதாவது பிப்ரவரி 23, 2022 முதல்) அதை அணுக முடியாது. ஆனால் ஏற்கனவே இந்த கேமை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பவர்களால் இதை தொடர்ந்து விளையாட முடியும்.

மேலும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் ரோவியோ கிளாசிக்ஸ்: ஆங்ரி பேர்ட்ஸ் கேமை இனிமேல் 'பர்ச்சேஸ்' செய்யவும் முடியாது. ஒருவேளை, இந்த கேமை 0.99 அமெரிக்க டாலர் செலுத்தி ஏற்கனவே வாங்கி இருந்தால், நீங்கள் இந்த கேமை தொடர்ந்து விளையாட முடியும்.
அறிமுகமாகி 1 ஆண்டு கூட முழுமையடையாத நிலைப்பாட்டில், இந்த கேம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கேம் பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் கேமானது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தான் "மீண்டும்" வந்தது!
ஆங்ரி பேர்ட்ஸ் கிளாசிக் கேம் - திடீரென நிறுத்தப்பட என்ன காரணம்?
வீடியோ கேம் நிறுவனமும் ஆங்ரி பேர்ட்ஸ் கிளாசிக் கேமின் தயாரிப்பாளருமான ரோவியோ (Rovio), "இந்த கேமின் மூலம் எங்களுடைய மற்ற கேம்களுக்கு ஏற்படும் தாக்கத்தின் விளைவாக இதை விநியோகத்தில் இருந்து விலக்க முடிவு செய்து உள்ளோம்" என்று ட்விட்டர் வழியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஆங்ரி பேர்ட்ஸ் ஒரிஜினல் வெர்ஷன் காணாமல் போனது ஏன்?
அறியாதோர்களுக்கு ஆங்ரி பேர்ட்ஸ் கிளாசிக் என்பது ஆங்ரி பேர்ட்ஸ் ஒரிஜினல் வெர்ஷனின் மறுவெளியீடு ஆகும். இது ஒரு பெரிய ஹிட் கேமாக உருமாறினாலும் கூட, ரோவியோ நிறுவனம் இலவசமாக விளையாடக்கூடிய மற்ற ஸ்பின்ஆஃப்கள் (Spinoffs) மற்றும் சீக்குவல்ஸில் (Sequels) கவனம் செலுத்தியதால், ஆங்ரி பேர்ட்ஸின் ஒரிஜினல் வெர்ஷன் நீண்ட காலத்திற்கு முன்பே டீலிஸ்ட் (Delist) செய்யப்பட்டது.
ரோவியோவின் கீழ் பணம் கேட்கும் ஒரே கேம்.. தற்போது காலியானது!
நீக்கப்படும் வரையிலாக (அதாவது 2022 பிப்ரவரி மாத நிலவரப்படி) கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அனுக கிடைக்கும் ரோவியோவின் பல தரப்பட்ட மொபைல் வீடியோ கேம்களில், பணம் செலுத்து வாங்க கூடிய / விளையாட கூடிய ஒரே ஒரு கேம் - ஆங்ரி பேர்ட்ஸ் கிளாசிக்கே ஆகும்!
கூகுள் பிளே ஸ்டோரில் மற்ற சில ஆங்ரி பேர்ட்ஸ் வெர்ஷன்களும் கிடைக்கின்றன!
ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் கேமின் இந்த திடீர் நீக்கம் உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தால், கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் ஆங்கிரி பேர்ட்ஸ் 2, ஆங்கிரி பேர்ட்ஸ் ஃபிரண்ட்ஸ் மற்றும் ஆங்ரி பேர்ட்ஸ் ஜர்னி போன்ற ஆங்ரி பேர்ட்ஸ் ஸ்லிங்ஷாட் கேம்கள் இன்னமும் அணுக கிடைக்கிறது!


Click it and Unblock the Notifications