நமக்குனு சொந்தமா பூமிக்கு மேல் ஒரு விண்வெளி மையம் அமைக்கிறோம்: ரஷ்யாவின் மெர்சல் முடிவு!
2025 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா சொந்தமாக விண்வெளி மையம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி மையத்திற்கான முக்கிய தொகுதி உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.

சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணில்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டு விண்வெளியில் கட்டத் தொடங்கினர்.

பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில்
இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.

தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காணும் விண்வெளி வீரர்கள்
தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல் வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.

விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன்
இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது. தற்போதுள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன் இரண்டு ஆண்டுகளில் முடிவடைவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பின் 2030-2050 களுக்கு இடையே பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் இது விழும் என கூறப்படுகிறது.

சொந்தமாக சர்வதேச விண்வெளி மையம் அமைக்க காரணம்
இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ல் ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கூட்டாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் வர்த்தக விவகாரம் ஏற்பட்டுவருகிறது. ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி உயிரிழந்தால் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா உக்ரைன் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

புதிய சர்வதேச விண்வெளி நிலையம்
இதையடுத்து புதிய சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. நேற்று(செவ்வாய்க்கிழமை) ரஷ்யா விண்வெளி நிறுவனம் சொந்த சுற்றுப்பாதை நிலையத்தை 2025 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ரஷ்ய சுற்றுப்பாதை நிலையத்தை அமைப்பதற்கான முதல் முக்கிய தொகுதி உருவாக்க பணி செயல்பாட்டில் இருப்பதாக ரோகோசின் செய்தி பயன்பாடு தெரிவிக்கிறது.

2025 ஆம் ஆண்டு இலக்கு
2025 ஆம் ஆண்டு ரஷ்யா சொந்த விண்வெளி நிலையம் அமைக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோலியோவை தளமாகக் கொண்ட எனர்ஜியா விண்வெளி கார்ப்பரேஷன் இந்த மையத்திற்கான முக்கிய தொகுதியை உருவாக்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டு இதை ஏவுவதற்கு தயாராக இருக்கும் என்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ரோகோசின் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications