இது பெருமையா?- போருக்கு மத்தியில் விண்ணுக்கு சென்ற ரஷ்ய வீரர்கள்: உக்ரைன் கொடி வண்ணத்தில் உடை அணிந்து டுவிஸ்ட்
ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவின் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றிருக்கின்றனர். விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற 3 ரஷ்ய விண்வெளி வீரர்களையும் ஆய்வு மையத்தில் இருந்த நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள், ஒரு ஜெர்மனிய விண்வெளி வீரர்கள் மற்றும் 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் வரவேற்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தனர். விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை உக்ரைன் நாட்டு கொடியை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

பிரகாசமான மஞ்சள் நிற உடை
ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் தலைவரால் வெளியிடப்பட்ட படங்கள் மூலம் நீல நிற டிரிம்மிங்ஸ் உடன் பிரகாசமான மஞ்சள் நிற உடைகளை விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற வீரர்கள் அணிந்திருக்கின்றனர். மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்களும் நீலம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர். ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் 25 ஆம் நாள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு சென்ற ரஷ்ய வீரர்கள் உக்ரைன் கொடியை பிரதிபலிக்கும் வகையிலான மஞ்சள் நிற உடை அணிந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விண்வெளி வீரர்களுக்கு நன்கு தெரியும்
இதையடுத்து பூமியில் நடக்கும் போர் குறித்து விண்வெளி வீரர்களுக்கு நன்கு தெரியும் எனவும் இது நிகழ்வு எந்த வகையிலும் ஆய்வை பாதிக்காது என நாசா தெரிவித்திருக்கிறது. மேலும் விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த ஆடை அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகைியல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் தலைவரால் வெளியிடப்பட்ட படங்கள் போருக்கு எதிரான சாத்தியமான அறிக்கையாக பார்க்கப்படுகிறது, நீல நிற டிரிம்மிங்ஸ் உக்ரேனிய வண்ணங்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் நிற உடைகளை அணிந்திருக்கும் விண்வெளி வீரர்களை அந்த புகைப்படங்கள் காட்டுகிறது.

உக்ரைனின் தேசியக் கொடி வண்ணம்
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24 முதல் போர் தொடுத்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒற்றுமையைக் காட்ட உக்ரைனின் தேசியக் கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலத்தை பயன்படுத்தி வருகின்றனர். விண்வெளி வீரர்களின் அணிந்திருந்த உடைக்கு சமூகவலைதள வாசிகள் பலவகையில் பதில்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு டுவிட்டர் பயனர் "தற்போது உக்ரைனில் ரஷ்ய ராணுவம் செய்த கொடூரமான போர்க்குற்றங்களுக்காக ரஷ்யர்களின் குற்றத்தை அகற்ற முயற்சிக்காமல், ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கள் ஜம்ப்சூட்களின் இந்த வண்ணங்களை தேர்ந்தெடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது என நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளிக்கு சென்ற வீரர்கள் விவரங்கள்
ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகிய மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்களும் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவதளத்தில் இருந்து சோயூஸ் எம்எஸ்-21 விண்கலத்தில் இருந்து புறப்பட்டனர். தற்போது சென்றுள்ள விண்வெளி வீரர்கள் அடுத்த ஆறரை மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் அளித்த தகவல்
முன்னதாக டெலிகிராமில் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் குறிப்பிடுகையில், 500 டன் எடையுள்ள விண்வெளி ஆய்வு மையம் கடலில் அல்லது நிலத்தில் கீழே விழும் என தெரிவித்துள்ளார். விண்வெளி குப்பைகளை தவிர்ப்பது உள்ளி்டட நிலையத்தின் சுற்றுப்பாதை சரி செய்வதை ரஷ்யா உறுதி செய்கிறது. இது சரியாக ஒரு வருடத்திற்கு 11 முறை செய்யப்படுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அப்படி கீழே விழும் பட்சத்தில் அது இருக்கக் கூடிய இடங்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விண்வெளி மையம் ரஷ்யாவில் விழுவதற்கு வாய்ப்பில்லை என சுட்டிக் காட்டினார்.

சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டம்
மறுபுறம் மார்ச் 1 அன்று, ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்கான ஒரு தீர்வை கண்டுபிடிக்க நாசா முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். அதேபோல் எங்கள் நிறுவனங்களுக்கு எதிரான சட்டவிரோதத் தடைகளை நீக்கக் கோரி., நாசா கனேடிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றிடம் ரோஸ்கோஸ்மோஸ் முறையிட்டிருக்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒத்துழைக்கும் எஞ்சியுள்ள ஒரு பகுதி விண்வெளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எஸ் என்றால் என்ன
முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா அல்லது சீனா நிலப்பரப்பு மீது விழுந்தால் என்ன செய்வீர்கள் என ரஷ்யா கேள்வி எழுப்பி இருந்தது. கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐஎஸ்எஸ் திட்டத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள். விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








