பீட்சாவை டெலிவரி செய்யும் பணியில் ரோபோக்கள்.! எங்கே தெரியுமா?
தற்போதைய சூழலில் ரோபோக்களின் உதவிகள் அதிகமாக தேவைப்படுகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மக்களுக்கு பல்வேறு பொருட்களை டெலிவரி செய்ய ரோபோக்கள் உதவி இருந்தால் நன்றாக தான் இருக்கும்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்து ஹியூஸ்டன் நகரில் ரோபோக்கள் உதவியுடன் பீட்சாவை டெலிவரி செய்யும் முயற்சி நடைபெற உள்ளது. குறிப்பாக அடுத்து சில நாட்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளதாக தகவல்வெளிவந்துள்ளது.

அதாவது டோமினோஸ் பீட்சா மற்றும் ரோபோட்டிக் கம்பெனியான நியூரோவும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் பீட்சாவை ஆர்டர் செய்து, அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தினால், அந்த வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு ரோபோக்கள் பீட்சாவை கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் வாடிக்கையாளர்கள் மொபைல்போனில் பெற்ற பாஸ்வேர்டை தொடு திரை வசதி கொண்ட ரோபோவில் என்டர் செய்வதன் மூலம் பீட்சாவை டெலிவரியாக பெறமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறைக்கு வேண்டி நியூரோவின் R2 என்ற ரோபோ பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த புதிய சேவை குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே வெள்ளோட்டம் பார்க்க உள்ளதாக அந்நிறுவனங்கள் கூறியுள்ளன. இதேபோல் சிங்கப்பூரில் புதிய முயற்சியாக டெலிவரி பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதாவது சிங்கப்பூரில் நீங்கள் ஆன்லைனில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் இந்த ரோபோ உங்களது வீட்டுக்கே வந்து பொருட்களை சேர்த்துவிடும். சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ரோபோ.
உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கின்றனர். பின்பு ஆர்டர் செய்த சிறுது நேரத்தில் டெலிவரி பாய் வந்து வீட்டு கதவை தட்டுவார். ஆனால் இப்போது நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் ரோபோ வந்து வீட்டுக்கதவை தட்டும்

சிங்கப்பூரில் டெலிவரி செய்யும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, கண்டிப்பாக இந்த புதிய முயற்சி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேமெல்லோ என்று பெயரிடப்பட்ட இரண்டு ரோபோக்கள் தான் இப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை ரோபோக்கள் 20 கிலோ வரையிலான பொருள்களை எந்தவித சேதமும் இன்றி கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ரோபோக்களில் இரு அறைகள் உண்டு எனத் தகவல் வெளிவந்துள்ளது.

தற்சமயம் 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியை சோதனை அடிப்படையில் செய்து வருகின்றன இந்த ரோபோக்கள். மேலும் இந்த சேவை பலபகுதிகளில் விரைவில் விரிவு படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த ரோபோகளை வடிவமைத்த நிறுவனமான OTSAW. இந்த புதிய வகை ரோபோக்களில் கேமரா, முப்பரிமாண சென்சார்கள் என பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ மாடல்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருந்த பொருட்கள் வைக்கப்பட்டவுடன், இவை குடியிருப்பை நோக்கி வரும் பாதை, பொருட்களை எடுத்து சென்று வழங்கும் இடம் போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும்.

மேலும் வெளிவந்த தகவலின்படி, வார நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் அரை நாளும் இந்த ரோபோக்கள் பணி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சென்று வழங்கிய பின்னர் தன்னைதானே சுத்தப்படுத்திக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளன இந்த ரோபோக்கள்.


Click it and Unblock the Notifications