ஓ மை காட்.! நிலவில் சாலை அமைக்க திட்டம்.. லேசர் மற்றும் லென்ஸ் வைத்து திடமான சாலையா?
என்னதான் நிலவில் (moon) மனிதர்களை தங்கவைக்கலாம். சந்திரனை மனிதர்களுக்கான மாற்று பூமியாக மாற்றலாம். செவ்வாய் செல்வதற்கு சந்திரனை ஒரு கனெக்டிங் பாயிண்ட்டாக பயன்படுத்தலாம் என்று பல யோசனைகளை விஞ்ஞானிகள் பரிந்துரைத்தாலும் உண்மையில் சந்திரன் அவ்வளவு நட்பான இடமில்லை.
ஆம், சந்திரன் மனிதர்களுக்கான விருந்தோம்பும் இடமாக இல்லை என்பதே உண்மையாகும். மூன்ஸ் ரெகோலித் (moon's regolith) என்று அழைக்கப்படும் சந்திரனின் மண்ணில் கூர்மையான, சிராய்ப்பு ஏற்படுத்தும் மற்றும் நச்சுத் துகள்களின் தூசி நிறைந்த ஒரு ஆபத்தான பொருலாகும். இது விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் சூட் (space suit) இல் ஒட்டிக்கொள்ளும். ஸ்பேஸ் சூட் உபகரணங்களை இது சேதப்படுத்தும்.

அப்பல்லோ விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு சந்திர மண்ணால் ஒவ்வாமை போன்ற எதிர்வினையை அவர் உடலில் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ 17 (Apollo 17) பயணத்தின் போது, சந்திர மண்ணால் பாதிக்கப்பட்ட ஹாரிசன் ஷ்மிட் (Harrison Schmitt) இதை லூனார் ஹே ஃபீவர் (lunar hay fever) என்று அழைக்கிறார். மனிதர்களை சந்திரனில் தங்கவைக்க வேண்டும் என்றால், ஒரு திடமான தரை தளம் வேண்டும்.
அதேபோல், நிலவில் மனிதர்களுக்கான முதல் காலனியை (human colony on moon) அமைக்கும் போதும், நிலவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பாதுகாப்பான சாலை (road on moon) தேவைப்படும். ஆனால், சந்திர மண் மிகவும் மிருதுவானது. இதில் பயணிப்பது கடினமானது மற்றும் ஆபத்தானது. ஆகையால், சந்திர மண்ணை திடப்படுத்த விஞ்ஞானிகள் சரியான வழியை தேடி வருகின்றனர்.
கிங்ஸ் ப்ளோமரேஸ் (Ginés-Palomares), மிராண்டா பெட்டரி (Miranda Fateri) மற்றும் ஜென்ஸ் கான்ஸ்டர் (Jens Günster) தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு, சந்திர ரெகோலித்தை பாதுகாப்பான மற்றும் உறுதியான ஒன்றாக மாற்ற முடியுமா என்று சோதனை செய்து வருகிறது. கார்பன் டை ஆக்சைடு லேசரைப் (carbon dioxide laser) பயன்படுத்தி இதை செய்யலாம் என்பதை கண்டறிந்துள்ளது.

லேசர் (laser) மற்றும் லென்ஸ்களை (lens) பயன்படுத்தி சந்திர மண்ணை திடமாக்க முடியும் என்று அக்குழு கூறியுள்ளது. ஆராய்ச்சி குழு உண்மையான சந்திர மண்ணைப் பயன்படுத்தவில்லை, ஆனால் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் (European Space Agency) உருவாக்கப்பட்ட சந்திர மண்ணுக்கு நிகரான உருவகப்படுத்தப்பட்ட மணலை பயன்படுத்தி, மூன்ஸ் ரெகோலித்தை உருக்கி இறுக செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.
100 மில்லிமீட்டர், அதாவது 4 இன்ச் அளவு கொண்ட 12 கிலோவாட் (kilowatt) ஆற்றல் வெளியீடு கொண்ட ஒரு லேசர் மூலம் ரெகோலித் உருக்கப்படுகிறது. இதன் மூலம் நிலவில் ஒரு திடமான மற்றும் தடிமனான ஸ்லாப்பை உருவாக்க முடியும். அதிக ஆற்றல் சந்திர மணல் இறுகும் போது, விரிசல்களுக்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் 45 மில்லிமீட்டர் (1.77-இன்ச்) லேசரைப் பயன்படுத்தி வட்டமான "முக்கோண" (rounded triangle) ஓடுகளை வடிவமைத்தனர்.
இவை சாலை அல்லது ஏவுதளம் (launchpad) போன்ற மேற்பரப்பை சேதமின்றி, விரிசல்கள் இன்றி உருவாக்க அனுமதித்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்னும், சில ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளார். இதேபோல், லேசர்களுக்கு பதிலாக எதிர்காலத்தில் பெரியளவு லென்ஸைப் பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட சூரிய ஒளியை ரெகோலித்தில் விழச்செய்து இறுக்கமான ஸ்லாப்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை ஒரு பூதக்கண்ணாடி (magnifying glass) மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒரு காகிதத்தை எரிப்பது போன்றது. இதை தான் நிலவில் செய்ய திட்டமிடுகிறார்கள். சந்திர மண் மிகவும் மிருதுவானது என்பதனால், இயற்கையான சூரிய ஒளியை பயன்படுத்தி அந்த மண்ணை உருக்கி, இறுக செய்து சாலைகள் அமைக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த வேலையைச் செய்ய 2.37 சதுர மீட்டர் (25.51 சதுர அடி) லென்ஸ் போதுமானதாக இருக்கும் என்று குழு நம்புகிறது. லேசர்கள் அல்லது கண்ணாடிகள் போலல்லாமல், லென்ஸ் அணுகுமுறை ஆற்றல் தேவைகள், குளிர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே, விண்வெளி வீரர்களுக்கு உண்மையில் வழி வகுக்க சந்திரனுக்கு ஒரு பெரிய பூதக்கண்ணாடி விரைவில் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








