சோதனை மேல் சோதனை: "ஜியோ" கட்டணம் மேலும் உயர்வு
ஜியோ சிம்காரட் இல்லாத ஸ்மார்ட் போன்கள் பார்ப்பது அரிது. பலவகையான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சிம்கார்டுகள் நமது செல்போனில் இருந்தாலும் கூடுதலாக ஜியோ சிம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பாக ஜியோ வருகைக்கு பிறகு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கூடுதலாக மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதித்ததும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

74 ஆயிரம் கோடி நஷ்டம் சந்தித்த நிறுவனங்கள்
ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில் வருவாய் குறைத்து காட்டியது தொடர்பான வழக்கில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாதம் 24 ஆம் தேதி உத்தரவிட்டது.

வரலாறு காணாத நஷ்டம்
வரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன் ஐடியா இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அண்மைக் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை. இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் முதல் வோடபோன் ஐடியா சேவைக் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்திற்கும் நஷ்டம்
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்லும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல், கடந்த காலாண்டில் மட்டும் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு நஷ்டங்களை சமாளிக்க டிசம்பர் மாதம் முதல் சேவைக் கட்டணத்தை உயர்த்தப்படும் எனவும் அறிவித்தது.

முன்னதாகவே உயர்த்திய ஜியோ
ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு 6 பைசா கட்டணம் என்று அறிவித்தவுடன் ஜியோ பயனர்களிடம் கடும் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன. அதோடு ஜியோ நிறுவனம் அண்மையில் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களை நீக்கி அறிவித்தது.

சில வாரங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படும்: ஜியோ
இந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் ஜியோ கட்டணங்கள் உயர்த்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்துறை வலுப்படுத்தும் நோக்கிலும், முதலீடுகளைத் தக்கவைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பாதிக்காத வகையில் கட்டணங்கள் உயர்த்தப்படும்
மற்ற ஆபரேட்டர்களைப் போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறையை வலுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் எனவும் டேரிஃப் அல்லது வளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications