அம்பானி வீட்டு கல்யாண செலவை பயனர்களின் தலையில் கட்டிவிட்டார்கள்.. புலம்பும் நெட்டிசன்கள்..
ஜியோ (jio) நிறுவனம் நாடு முழுவதும் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்தி உள்ளது. இந்நிலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை உயர்த்தப்பட்டதால் நொந்துபோன வாடிக்கையாளர்கள் தங்களது புலம்பல் உடன் அம்பானி குடும்பத்தினரையும் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனங்களின் ஒன்று ரிலையன்ஸ் ஜியோ. 4ஜி (4G) வருகையுடன் அறிமுகமான ஜியோ நாட்டில் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தது என்றே கூறலாம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட திட்டங்களை வழங்கி வந்தது ஜியோ நிறுவனம்.

ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜியோவின் இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளன. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் இந்த முடிவுக்கு நெட்டிசன்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
புதிய திட்டங்கள் ஜூலை 3 முதலே அமலுக்கு வரும் என்று ஜியோ அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் தங்களது புலம்பல் மற்றும் கலாய்ப்புகளை இன்றே தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் சிலர் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய பிரமாண்ட விழாக்களைக் கேலியோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஜியோ தனது கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அம்பானி வீட்டுத் திருமண செலவுகளை யாரோ ஒருவர் ஏற்றாக வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதவிர ஜியோ கட்டண திட்டத்தையும் அம்பானி வீட்டு திருமண செலவையும் கூட ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். குறிப்பாக ஆனந்த அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை ஒட்டி அம்பானி குடும்பத்தினர் உலகே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரமாண்ட விழாக்களை நடத்தி வருகின்றனர். கோடிகளைக் கொட்டி வரவழைக்கப்பட்ட சர்வதேச இசைப் பாடகர்கள், பாலிவுட் பிரபலங்களின் நடனம், விருந்தினர்களுக்கான விமான மற்றும் கப்பல் வசதிகள், திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் என அம்பானி வீட்டுக் கல்யாணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள புதிய கட்டணங்களைப் பார்க்கலாம். அதாவது மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.155 கட்டணம் ரூ.189 அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ரூ.239 ஆக இருந்த கட்டண ரூ.299 ஆகவும், ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரித்து உள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் 28 நாட்களுக்கு ரூ.299 (தினமும் 2ஜிபி) ஆக இருந்த கட்டணம் ரூ.349 ஆக அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து தினமும் 1.5ஜிபி உடன் 3 மாதத்திற்கான கட்டணம் ரூ.666-இல் இருந்து ரூ.799 ஆக உயர்கிறது. மேலும் இந்த புதிய கட்டணம் விலை உயர்வு வரும் ஜூலை 3-ம் தேதி அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தைப் போன்றே ஏர்டெல் (airtel) நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source: Meet Shah, Nimo Tai


Click it and Unblock the Notifications








