மிகப்பெரிய சொத்துங்க.. சாலையில் கிடந்த ஐபோன்.. உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..
சாலையில் கிடந்த ஐபோனை (iPhone) கண்டெடுத்துத் தந்தவருக்கு, அதன் உரிமையாளர் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் இந்த மொபைல் போனை உரிமையாளரிடம் போராடி ஒப்படைத்தவரின் செயலை தற்போது நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது பெங்களூரு (Bengaluru) நகரில் சில்க் போர்டு சாலையில் (Silk board road) சென்று கொண்டிருந்த ஒரு நபர், தற்செயலாகக் கீழே ஐபோன் ஒன்று கிடந்ததைப் பார்த்துள்ளார். உடனே அந்த போனை எடுத்துப் பார்த்த போது அதன் டிஸ்பிளே மிகவும் சேதமடைந்து இருந்தது. டிஸ்பிளே முழுவதும் நொறுங்கி இருந்ததால் அதனை இயக்கக் கூட முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த நபர் தனது @IcyRefrigerator9291 என்ற ரெட்டிட் வலைப்பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டார். அதில் சில்க் போர்டு சாலைக்கு அருகே ஒரு ஐபோனை கண்டெடுத்தேன். இது உங்களுடையது என்றால் கவலைப்பட வேண்டாம். எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்தார்.
மேலும் அந்த பதிவில் ஐபோன் மிகவும் மோசமாகச் சேதமானதைப் பார்க்கும் போது வாகனம் அதன் மீது ஏறி இருக்கும் என்று தெரிகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் அந்த நபர் ஐபோனை காவல் நிலையத்தில் வழங்கலாம் என்று அவர் முடிவெடுத்தார், இருந்தபோதிலும் ஐபோனில் உள்ள சிம் கார்டினை தனது போனுக்கு மாற்றி அதை ஆன் செய்த போது அதில் ஏராளமான மிஸ்டுகால்கள், மற்றும் மெசேஜ்கள் வந்திருந்தன.
அதன்பின்பு ஐபோனின் உரிமையாளரின் நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது பெங்களூருவில் உள்ள பிரபலமான மாலுக்கு நேரில் வரும்படியும் அங்கு ஐபோனை தன் நண்பர் வாங்கிக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஐபோனை வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் அந்த மாலில் செய்யப்பட்டன.
ஐபோனை தொலைத்த கேரளாவைச் சேர்ந்த நபர் அந்த மாலுக்கு நேரில் வந்து, தொலைந்து போன தனது போனை நெகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். குறிப்பாக இந்த தருணத்தில் ஐபோன் உரிமையாளர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்டார். அதுவும் அந்த ஐபோனை பெற்றுக் கொண்டபோது அவரின் கைகள் நடுங்கின.

இதற்குக் காரணம் என்னவென்றால், இறந்துபோன அவரின் தந்தையின் கடைசி புகைப்படம் அதில் தான் இருந்தது. குறிப்பாகத் தனது மிகப்பெரிய சொத்து மீண்டும் கைக்கு வந்த மகிழ்ச்சியில், அதைக் கண்டெடுத்துத் திருப்பிக் கொடுத்த நபருக்கு நன்றி கூறி, உணவு விருந்து அளித்து உபசரித்து அனுப்பிவைத்தார்.
மேலும் ரெட்டிட் பயனரின் இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் ஒருவர், நீங்கள் மரியாதைக்குரிய நபர். அனைத்து விருதுகளுக்கும் நீங்கள் தகுதியானவர் என்று புகழ்ந்துள்ளார். மற்றொருவர் ஆஹா, நான் படித்ததில் இதுவே சிறந்த விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பல பாராட்டுக்கள் அவருக்கு தற்போது கிடைத்து வருகிறது.
photo courtesy: betanews


Click it and Unblock the Notifications








