இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் செலவழிக்கும் நேரம் அதிகரித்துள்ளது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..
மனித வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுடன், இந்த நவீன உலகத்தில் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய பொருள் தான் ஸ்மார்ட்போன் போல அனைவரும் நடந்துகொள்கின்றனர். கையில் போன் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கையில் எதோ ஒன்றை இழந்தது போலப் பலரும் சோகமாகிவிடுகிறார்கள். சிலருக்கு இந்த ஸ்மார்ட்போன் கையில் இல்லை என்றால் எதுவுமே நடக்காது போன்று நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

மனிதர்களின் நடவடிக்கையையே மொத்தமாக மாற்றிய ஸ்மார்ட்போன்கள்
அவசர தேவைக்காகவும், பிறரை எளிதில் இருக்குமிடத்திலிருந்து தொடர்புகொள்ளவும் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் போன்கள், நாகரிக வளர்ச்சியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் ஸ்மார்ட்போன்களாக மாறி இன்று மனிதர்களின் நடவடிக்கையையே மொத்தமாக மாற்றியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்மார்ட்போன் பயனர்களிடம் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவு பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

15-45 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு
'ஸ்மார்ட்போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம் 2020' என்ற தலைப்பில் விவோவுக்காக சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தான் கீழே கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. முதலில் இந்த ஆய்வு 15-45 வயதுடைய 2,000 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் செலவழிக்கும் நேரம் சராசரியாக 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

நல்லதும் இருக்கு.. கெட்டதும் இருக்கு
ஆய்வு என்றாலே அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் தானே.. அப்படி, ஸ்மார்ட்போன் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக 66 சதவீத இந்தியர்கள் நம்புவதாக ஆய்வின் முடியில் தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் ஸ்மார்ட்போனைகளை அதிகம் பயன்படுத்துவதினால் மன நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கக்கூடும் என்று நம்புவதாக 70 சதவீத இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

ஓடிடி முதல் ஸ்மார்ட்போன் கேமிங் வரை
அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் ஓடிடி பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 59 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், கேமிங் விளையாடும் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் சுமார் 45 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

அதிக நேரத்தை இந்தியர்கள் ஸ்மார்ட்போனுடன் கழிக்கின்றனர்
இந்த அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் முந்தைய ஆண்டுகளை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், பெரும்பாலான நேரத்தை இந்தியர்கள் ஸ்மார்ட்போனுடன் கழிக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 சதவீத பயனர்கள் மட்டுமே இதை செய்துள்ளனர்
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 74 சதவீதம் பேர், அவ்வப்போது ஸ்மார்ட்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைப்பதன் மூலம் சிறிது நேரம் குடும்பத்துடன் செலவிட முடியும் என்று நம்புகின்றனர்.ஆனால், இதுவரை இந்த பழக்கத்தை ஆய்வில் கலந்துகொண்ட 18 சதவீத பயனர்கள் மட்டுமே செய்துள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

குடும்பத்துடன் இணைந்திருப்பதே ஸ்மார்ட்போன் மூலம் தான்
போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் இந்தியர்களும் இந்நாட்டில் இருப்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் இவர்களுடைய முயற்சிக்கு நம்முடைய பாராட்டுக்கள். இருப்பினும் 79 சதவீத ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களின் குடும்பத்துடன் இணைந்திருப்பதே ஸ்மார்ட்போன் மூலம் தான் என்று கூறுகிறது இந்த ரிப்போர்ட்.


Click it and Unblock the Notifications