விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், வேலையைச் சுலபமாக்கும் வீட்டு உபயோக பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். அப்படி இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாக இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களில் ஒன்று தான் வாட்டர் ஹீட்டர் எனப்படும் வாட்டர் கீசர்கள் (Geyser).
இதில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ, அதே அளவு சில பின்னடைவுகளும் இதில் உள்ளது. குறிப்பாக, சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் ஆபத்தில் முடியும் அளவிற்கு சில மோசமான பாதிப்புகளை சில கீசர் சாதனங்கள் உருவாக்குகின்றன என்பதே உண்மையாகும். பெரும்பாலான மக்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதனால், உங்களுடன் இந்த பதிவைப் பகிர்ந்துகொள்கிறோம்.

உண்மையில் நிகழ்ந்த நிகழ்ந்த நிகழ்வால் பதட்டம்.!
இது எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் வகையில், இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, தனக்கும் தனது மனைவிக்கும் நிகழ்ந்த திக்திக் நிமிடங்களை விவரித்து, சமீபத்தில் திவ்யான்ஷு அசோபா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். இதில் அவருடைய மனைவின் உயிரை குடிக்க, எப்படி ஒரு வாட்டர் கீசர் (Water Geyser) காரணமானது என்பது பற்றிய தன்னுடைய நிஜ அனுபவத்தை அவர் விவரித்து பதிவிடுகிறார். வாட்டர் கீசர் பற்றிய இந்த பதிவு இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் குளிக்க சென்ற தன்னுடைய மனைவி 20 நிமிடங்களுக்கு மேலாகியும் திரும்பி வராததால், சந்தேகப்பட்ட திவான்சு பாத்ரூம் கதவை திறந்து பார்த்துள்ளார். அங்கே, அவரது மனைவி சுயநினைவு இல்லாமல் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கவனித்த அவர் பதட்டம் அடைந்து, அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவர்கள் சொன்ன உண்மையை கேட்டு ஆடிப்போன கணவன்.!
திவ்யான்ஷு தன்னுடைய மனைவியின் இந்த நிலைமைக்கு அவர்களது வீட்டில் இருக்கும் கேஸ் கீசர் (Gas Geyser) தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார். எல்பிஜி (LPG) வாயுவை பயன்படுத்தி சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை கொண்டு தண்ணீரை சூடு படுத்தும் கேஸ் கீசர்கள் வெளியிட்ட நச்சு வாயு காரணமாகத் தான் தன்னுடைய மனைவி சுயநினைவு இழந்து மயக்கம் அடைந்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வாட்டர் ஹீட்டர் என்று அழைக்கப்படும் இந்த கீசர் சாதனங்கள் சாதாரண எலக்ட்ரிக்கல் (Electrical) கீசர் மற்றும் கேஸ் (Gas) கீசர் என்று இரண்டு வகையான கீசர்களாக வருகின்றன. அதில் கேஸ் கீசர்கள் என்பது எல்பிஜி வாயுவை பயன்படுத்தி தண்ணீரைச் சூடு படுத்தும் செயல்திறன் கொண்ட கீசராகும். தண்ணீர் வேகமாக சூடாவது மட்டுமின்றி தொடர்ச்சியாக சூடான தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த கீசர் செயல்படும் என்பதால் இந்த கீசர் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது.

ஏன் 'இந்த' வகை வாட்டர் ஹீட்டர் அல்லது கீசர் ஆபத்தானது?
கேஸ் கீசரில் மூன்று குழாய்கள் இருக்கும். ஒரு குழாய் தண்ணீரை உள்ளே செலுத்தவும், மற்றொரு குழாய் வாயுவை உள்ளே செலுத்தவும் பயன்படும். மூன்றாவது குழாயில் சூடான தண்ணீர் வெளியே வரும். கீசரை ஆன் செய்யும் பொழுது முதலில் வாயு உள்ளே செலுத்தப்பட்டு கீசரினுள் இருக்கும் ஃப்ளேமை (Flame) தூண்டிவிடும். பின்னர் தண்ணீர் உள்ளே வரும்பொழுது அது சூடாகும்.
இந்த வகையான கீசர்கள் எரிவதற்குச் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தும். எனவே இவற்றை வெளிப்புறத்தில் காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், நமது வீடுகளில் உள்ள பாத்ரூம்களில் காற்றோட்டம் குறைவாக இருக்கும், இத்தகைய பகுதிகளில் இதனை இன்ஸ்டால் செய்து வைக்கும் பொழுது, அறையினுள் இருக்கும் ஆக்சிஜன் அனைத்தையும் இந்த கீசரே எடுத்துக்கொள்கிறது.
கண்களுக்கு தெரியாத நஞ்சு வாயுவால் உயிரே கூட போகலாம்.!
இது ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதோடு, கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) என்ற நச்சு வாயுவை வெளியே விடும். இந்த கார்பன் மோனாக்சைடு அதிகமாகச் சுவாசிக்கப்படும் போது மயக்கம், மூளை பாதிப்பு போன்ற உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான கார்பன் மோனாக்சைடு நச்சு வாயு சுவாசிக்கப்படும் போது சில சமயம் இறப்பு கூட நேரிடலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
எனவே கேஸ் கீசரை பயன்படுத்தினால் காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பாத்ரூமில் காற்றோட்டம் குறைவாக இருக்கும் நிலையில் எலக்ட்ரிக்கல் கீசரை பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு ஏற்ற கீசர் எது என்று தேவை அறிந்து வாங்குவது பாதுகாப்பானது மக்களே. கீசர் பற்றி தெரியாமல் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








