முக்கோண போர் ஆரம்பம்.. Jio, Airtel வயிற்றில் புளியை கரைத்த Vodafone Idea.. 5G சேவை அறிமுகத்தை அறிவித்தது!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் (Sunil Mittal) தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு நிறுவனங்களுமே "கிட்டத்தட்ட" இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி நெட்வொர்களை அறிமுகம் செய்துவிட்டன.
மீதமுள்ள 2 பெரிய டெலிகாம் நிறுவனங்களில், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமானது பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை (PAN India 4G Service) அறிமுகம் செய்யவே தடுமாறுகிறது. கடைசியாக உள்ள வோடாபோன் ஐடியாவானது 5ஜி அறிமுகம் குறித்து நேற்று வரையிலாக "முக்கிய அறிவிப்பு" எதையுமே வெளியிடாமல் இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை!

விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது தனது 5ஜி நெட்வொர்க் (5G Network) அறிமுகம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. வோடாபோன் ஐடியா 6 மாதங்களுக்கு பிறகு 5ஜி சேவையை வெளியிடத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
க்யூ4 எஃப்ஒய்24 முதலீட்டாளர்களின் அழைப்பின் (Q4 FY24 investors call) போது விஐஎல்-ன் சிஇஓ-வான அக்ஷயா மூன்ட்ரா, வருகிற நவம்பரில், அதாவது ஆறு மாதங்களில் 5ஜி-ஐ வெளியிட தொடங்குவோம் என்று உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் 5ஜி டிவைஸ் கான்சென்ட்ரேஷன் அதிகமாக இருப்பதால், 5ஜி வெளியீடுக்காக நகர்ப்புற நகரங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஏற்கனவே 5ஜி மூலம் பல ஆயிரம் இந்திய நகரங்கள் மற்றும் நகரங்களை அடைந்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு போட்டியாக வோடபோன் ஐடியாவும் 5ஜி என்எஸ்ஏ-ஐ வெளியிடும். நினைவூட்டும் வண்ணம், வோடாபோன் ஐடியா நிறுவனமானது கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் விஐ ஏர்ஃபைபர் (Vi AirFiber) எனப்படும் அதன் 5ஜி பிக்ஸடு வயர்லெஸ் அக்செஸ் சொல்யூஷனை ஏற்கனவே காட்சிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்நிறுவனம் சென்னை, மகாராஷ்டிரா (புனே), டெல்லி, பஞ்சாப் மற்றும் நான்கு வட்டங்களில் 5ஜி-ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் வோடாபோன் ஐடியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது வரை பரந்த அளவிலான 5ஜி அறிமுகத்தை திட்டமிட முடியாமல் போக காரணம் வோடாபோன் ஐடியாவின் நிதி சிக்கல்கள் தான் காரணம்.
ஆனால் இப்போது இந்நிறுவனம் ரூ.20,000 கோடியை ஈக்விட்டியில் திரட்டியிருப்பதால், அந்த பணத்தை 4ஜியின் விரிவாக்கம் மற்றும் 5ஜி-யின் வெளியீட்டிற்காக பயன்படுத்த பார்க்கிறது.5ஜி இல்லாததால் தான் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஆனது தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன; மேலும் அவர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகின்றன.
ஆனால் விஐ வாடிக்கையாளர்களுக்கு "தற்போது வரையிலாக" அத்தகைய சலுகை எதுவும் இல்லை. இந்நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 200 மில்லியனில் இருந்து 193 மில்லியனாக குறைந்துள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஏஆர்பியு-வின் (ஒரு பயனருக்கான சராசரி வருவாயின்) வளர்ச்சி அதிகமாக இருந்தபோதிலும் (ரூ.146) அது பெரிய விஷயமாக இல்லை. ஏனென்றால் ஜியோவின் ஏஆர்பியு ரூ 181.7 ஆக உள்ளது, ஏர்டெல்லின் ஏஆர்பியு ரூ 209 ஆக உள்ளது
பிஎஸ்என்எல் 5ஜி-யின் அறிமுகத்தை பொறுத்தவரை, டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறையை (Department of Telecommunications) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, அடுத்த 12 மாதங்களுக்குள் பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே 3,500-க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவியுள்ளது. இந்த எண்ணிக்கை 20,000 டவர்களை எட்டியவுடன் இந்தியா முழுவதும் முழு அளவிலான வணிக ரீதியிலான 4ஜி அறிமுகம் நடக்கும்; அதன் பின்னரே 5ஜி அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








