இனி மாதம் ரூ.25000 லிமிட்.. 1 ஆண்டு பயன்படுத்தாத பேலன்ஸ் ரிட்டர்ன்.. RBI-யின் புதிய டிஜிட்டல் பேமண்ட் விதிகள்!
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது - நாளுக்கு நாள் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital payments) தொடர்பான விதிமுறைகளில் சில முக்கியமான மாற்றங்களை முன்மொழிந்து உள்ளது.
இவைகள் - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், செயல்பாடுகளை தரப்படுத்தவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை (Customer protection) மேம்படுத்தவும், பிபிஐ (PPI) என்கிற ப்ரீபெய்ட் பணப்பரிவர்த்தனை இன்ஸ்ட்ரூமென்ட்களை (Prepaid Payment Instruments) நிர்வகிக்கவும் உதவும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நம்புகிறது.

அறியாதோர்களுக்கு பிபிஐ என்றால் - ஆன்லைன் ஷாப்பிங், கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்காக முன்கூட்டியே பணம் ஏற்றப்பட்ட டிஜிட்டல் வாலெட்டுகள் அல்லது பிஸிக்கல் கார்டுகள் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் இவைகள், ரொக்கத்திற்கான ஒரு பாதுகாப்பான மாற்றை வழங்குகின்றன. பொதுவான வகைகளில் டிஜிட்டல் வாலெட்டுகள் (பேடிஎம், போன்பே) மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகள் (கிஃப்ட் கார்டுகள், டிராவல் கார்டுகள்) ஆகியவைகள் அடங்கும்.
ஆர்பிஐ ஆல் முன்மொழியப்பட்ட இந்த கட்டமைப்பு, தற்போதுள்ள 2021 வழிகாட்டுதல்களுக்கு பதிலாக, வாலட் வழங்குநர்கள், ப்ரீபெய்ட் கார்டுகள் மற்றும் பிற பிபிஐ இயக்குநர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தும். இது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்கள் மற்றும் அமைப்பு பங்கேற்பாளர்களுக்கும் பொருந்தும், மேலும் ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றில் கூர்மையாக கவனம் செலுத்துகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பிபிஐ-கள் மீதான ஒரு வரைவு முதன்மை வழிகாட்டுதலை (Master Direction on PPIs) வெளியிட்டுள்ளது. இதற்காக - ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிட ம் இருந்து மே 22, 2026 வரை கருத்துக்களையும் வரவேற்கிறது.
என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது? முக்கிய மாற்றங்களில் ஒன்று, பரிவர்த்தனை வரம்புகள், பயன்பாட்டு கட்டுப்பாடுகள் ஆகும். பயன்பாட்டு எளிமையையும் இடர் கட்டுப்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பரிவர்த்தனை வரம்புகளையும் செம்மைப்படுத்தியுள்ளது. முழுமையான கேஒய்சி-உடன் கூடிய பிபிஐ-களுக்கு ரூ.2 லட்சம் நிலுவை தொகை வரம்பும், அதற்கு இணையான மாதாந்திர கிரெடிட் லிமிட்டும் இருக்கும்.
இருப்பினும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்யப்படும் பரிமாற்றங்கள் மாதத்திற்கு ரூ.25,000 எனவும், ரொக்கமாக பணம் ஏற்றுவது ரூ.10,000 எனவும் கட்டுப்படுத்தப்படும். குறைந்தபட்ச கேஒய்சி-ஐ உள்ளடக்கிய சிறிய பிபிஐ-கள் ஆனது ரூ.10,000 நிலுவை தொகை வரம்பு உட்பட, கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். இதில் நிதி பரிமாற்றங்கள் அல்லது ரொக்கமாக பணம் எடுப்பதற்கான வசதி இருக்காது.
குறைந்தபட்சம் ரூ.5 கோடி: ஆர்பி -யின் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது வங்கி அல்லாத வழங்குநர்களுக்கான நுழைவு மற்றும் மூலதன தேவைகளிலும் கவனம் செலுத்துகிறது. பிபிஐ துறையில் நுழையும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 கோடி நிகர மதிப்பு தேவைப்படும், இது மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.15 கோடியாக உயர்த்தப்பட வேண்டும். கூடுதலாக, பணம் செலுத்தும் முறைமை செயல்பாட்டாளர்களுக்கான அங்கீகாரங்கள் இனி நிரந்தர அடிப்படையில் வழங்கப்படும். இது, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டிய தேவையை நீக்கி, ஒழுங்குமுறையில் அதிக தெளிவை வழங்கும்.
இடைசெயல்தன்மைக்கான உந்துதல்: ஆர்பிஐ -யின் புதிய வழிகாட்டுதல்களால், இடைசெயல்தன்மையை (interoperability) நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க உந்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழு-கேஒய்சி பிபிஐ-கள் (Full-KYC PPIs) ஆனது கார்டு நெட்வொர்க்குகள் அல்லது யுபிஐ (UPI) மூலம் இடைசெயல்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது. இது பல்வேறு தளங்களில் தடையற்ற பரிவர்த்தனைகளை சாத்தியமாக்குகிறது.
இந்த நடவடிக்கை, பயனர்களின் வசதியை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிபிஐ-களின் எல்லை கடந்த பயன்பாடு இன்னும் அனுமதிக்கப்படவில்லை, இது ஒரு எச்சரிக்கையான ஒழுங்குமுறை நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
1 ஆண்டு பயன்படுத்தாத தொகை ரிட்டர்ன்: கடைசியாக திருத்தப்பட்ட கட்டமைப்பின் மையத்தூணாக வாடிக்கையாளர் பாதுகாப்பு உள்ளது. வழங்குநர்கள் அனைத்து கட்டணங்களையும் விதிமுறைகளையும் தெளிவாக வெளியிடவும், வலுவான குறைதீர்ப்பு அமைப்புகளை பராமரிக்கவும், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தின் கீழ் வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை தற்காலிகமாக மீற நேர்ந்தாலும், திருப்பி செலுத்தப்படும் தொகைகள் உடனடியாக பிபிஐ-களில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. செயல்பாட்டு ரீதியாக, வங்கி சாரா நிறுவனங்கள், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளுடன் எஸ்க்ரோ கணக்குகளையும் பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம், நிலுவையில் உள்ள தொகைகள் தினசரி அடிப்படையில் சரிபார்க்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி ஆனது செயலற்ற கணக்குகள் தொடர்பாக கடுமையான விதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பிபிஐ-கள் ஆனது ஒரு வருட செயலற்ற நிலைக்கு பிறகு செயலிழக்க செய்யப்படும். மேலும், அடுத்த ஒரு வருடத்திற்கு அவை மீண்டும் செயல்படுத்தப்படாவிட்டால், அவை மூடப்பட்டு, மீதமுள்ள இருப்பு தொகை மூல கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும்.


Click it and Unblock the Notifications