ரூ.15000 லிமிட் உடன் ATM, கிரெடிட் கார்டு, UPI யூசர்களுக்கு புது ரூல்ஸ்.. RBI அறிவித்துள்ள முக்கிய மாற்றம்!
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, கிரெடிட் கார்டுகள், டெபிட் (ஏடிஎம்) கார்டுகள், யுனிஃபைடு பேமண்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) மற்றும் ப்ரீபெய்ட் பேமண்ட் டூல்ஸ் பிபிஐ) வழியாக நடைபெறும் மின்னணு தானியங்கி பணப்பரிவர்த்தனைகளுக்கான (Electronic auto-pay transactions) புதிய விதிகளை அறிவித்துள்ளது.
ஆட்டோ-பே என்றால் என்ன? மின்னணு தானியங்கு பரிவர்த்தனைகள், அல்லது ஆட்டோபே என்பது, ஒரு வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட தேதியில் பேங்க் அக்கவுண்ட், கிரெடிட் கார்டு அல்லது ப்ரீபெய்ட் வாலட்டிலிருந்து நேரடியாக பணத்தை பிடித்தம் செய்யும் - ஆட்டோமேட்டிக் ஆக மற்றும் தொடர்ச்சியாக நடக்கும் பேமண்ட்கள் ஆகும்.

முக்கியமாக சந்தாக்கள் (Subscriptions), பயன்பாட்டு சேவைகள் (Utilities) மற்றும் லோன்களுக்கு (Loan) பயன்படுத்தப்படும் இவ்வகை பரிவர்த்தனை ஆனது கைமுறையாக பணம் செலுத்தும் தேவையை நீக்குகிறது. கூடவே பணம் செலுத்த தவறுவதையும், தாமதமாக பணம் செலுத்துவதால் ஏற்படும் கட்டணங்களையும் குறைக்கின்றன.
உடனடி அமல்: ஆட்டோ-பே தொடர்பாக ஆர்பிஐ அறிவித்துள்ள மாற்றங்கள் - டெபிட், கிரெடிட் கார்டுகள், பிபிஐ-கள் (அதாவது, வாலெட்டுகள்) மற்றும் யுபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான மற்றும் உள்நாட்டு அல்லது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் அனைத்து பேமண்ட் சிஸ்டம் வழங்குநர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
ஆர்பிஐ அறிவித்துள்ள புதிய ஆட்டோ-பே பேமண்ட் விதிகள்: முதல் மற்றும் முக்கிய மாற்றம் - ரூ.15,000 வரையிலான தொடர்ச்சியான பரிவர்த்தனைகளை (Recurring transactions), ஓடிபி போன்ற கூடுதல் அங்கீகாரம் தேவையின்றி செயல்படுத்தலாம். இந்த செயல்முறையைச் சரிபார்க்க, பயனர்கள் அடிஷனல் பேக்டர் ஆத்தென்டிகேஷனை (Additional factor authentication - AFA) பயன்படுத்தி ஒரு முறைக்கான இ-மேன்டேட்டிற்கு பதிவு செய்ய வேண்டும்.
அது அங்கீகரிக்கப்பட்டவுடன், ரூ.15,000 வரையிலான அடுத்தடுத்த தொடர்ச்சியான பேமண்ட்கள் ஒவ்வொரு முறையும் ஒடிபி தேவையின்றி தானாகவே செயல்படுத்தப்படும். இதில் உங்கள் நிலையான வைப்புத்தொகைகள், பரஸ்பர நிதிகள், சேமிப்பு மற்றும் காப்பு நிதிகள் (SIPs), சந்தாக்கள் (நெட்ஃபிக்ஸ், டாடா ஸ்கை), மாத தவணைகள், கட்டணங்கள் (தண்ணீர், மின்சாரம், இணையம்), காப்பீட்டு பற்றுக்கள் மற்றும் பலவற்றிற்கான தொடர் பேமண்ட்கள் அடங்கும்.
பதிவுசெய்த பிறகு வாடிக்கையாளர்கள், தொடர் கட்டண வழிமுறைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம், இடைநிறுத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். இந்த மாற்றங்கள் ஏஎப்ஏ மூலம் அங்கீகரிக்கப்படும். மாறுபடும் கட்டணங்களுக்கு, வரையறுக்கப்பட்ட வரம்பிற்கு மேல் எதிர்பாராத பற்றுக்களை தவிர்க்க, பயனர்கள் ஒரு உச்ச வரம்பையும் அமைக்கலாம்.
வங்கி அல்லது கட்டண சேவை வழங்குநர்கள், இ-மேன்டேட்டின் செல்லுபடியாகும் காலத்தை குறிப்பிட வேண்டும் என்றும், இந்த தகவல் பதிவு செய்யும் நேரத்தில் வாடிக்கையாளருக்குத் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.15,000 என்கிற வரம்பிற்கு மேற்பட்ட பெரும்பாலான கட்டண பரிவர்த்தனைகளுக்கு மீண்டும்-மீண்டும் ஒடிபி அங்கீகாரம் தேவைப்படும்.
காப்பீட்டு பிரீமியங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கான தொடர் கட்டணங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இவைகள் இ-மேன்டேட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஏஎப்ஏ இல்லாமல் ரூ.1 லட்சம் வரை செல்லலாம்.
வங்கிகள் தெளிவான அறிவிப்புகளை வழங்க வேண்டும், கூடுதல் கட்டணங்கள் இருக்க கூடாது: தொடர் பரிவர்த்தனைகளுக்கான இ-மேன்டேட் வசதியை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பரிவர்த்தனைக்குக் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பாக, பரிவர்த்தனை தொகை, பற்று வைக்கப்பட்ட தேதி மற்றும் வணிகரின் பெயர் போன்ற விவரங்களை வாடிக்கையாளருடன் பகிர்ந்துகொண்டு, பற்று வைப்பதற்கு முந்தைய எச்சரிக்கைகளை வங்கிகளும், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்களும் அனுப்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தவறான பரிவர்த்தனையாகவோ அல்லது மோசடியானதாகவோ இருந்தால், பணம் செலுத்தப்படுவதற்கு முன்பு அந்த மேன்டேட்டில்இருந்து விலகிக்கொள்ள அல்லது அதை ரத்து செய்ய, இந்த எச்சரிக்கைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், பரிவர்த்தனைக்கு முந்தைய எச்சரிக்கையை பெறும் முறையை - இமெயில், மெசேஜ் (SMS) அல்லது பிற விருப்பங்கள் வழியாக - வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்ய அல்லது புதுப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஃபாஸ்டேக் (FASTag) மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (National Common Mobility Card - NCMC) பேலன்ஸ்களின் தானியங்கி நிரப்பலுக்கு, பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பு தேவையிலிருந்து இந்த விதிவிலக்கு பொருந்தும். மேலும், வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள், பரிவர்த்தனைக்கு பிந்தைய அறிவிப்புகளையும், முறையான குறைதீர்ப்பு அமைப்புகளையும் வழங்க வேண்டும் என்பதும் காட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications