யுபிஐ சேவை தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படுமா? RBI ஆளுநர் போட்டுடைத்த உண்மை!
இந்தியா முழுவதும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றர். குறிப்பாக இந்த யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கும் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களில் இந்த யுபிஐ வசதி பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களுக்கு இன்று அறிவித்தார். குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதறக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது எனத் தெரிவித்தார். அதேபோல் இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தி தான் ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீட்டித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான செலவை யாரேனும் ஒருவர் ஏற்று தானே ஆகவேண்டும் என பதிலளித்திருக்கும் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அதை தனி நபர்கள் செலுத்துகிறார்களா அல்லது ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து செலுத்துகிறார்களா என்பதைத் தாண்டி யாரேனும் ஒருவர் செலவை ஏற்க வேண்டும் என்பது முக்கிய எனக் கூறியுள்ளார்.
இப்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது பேமெண்ட் கேட்வே செயலிகளுக்கோ விதிக்கப்படுவது இல்லை. அரசு தான் இதற்கான கட்டணங்களை ஏற்கிறது. இந்த நிலையில் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்த பதில் நீண்ட நாளைக்கு யுபிஐ சேவைகள் இலவசமாகவே இருக்காது, இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நாம் செலுத்தக்கூடிய காலம் வரும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, யுபிஐ சேவையில் பல புதிய மாற்றங்கள் வர உள்ளதாகத் தகவல் வெளியானது. அதாவது பின் (PIN) நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியைத் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம்(NPCI) விரைவில் அமலுக்குக் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனைக்குப் பின் நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனைத் தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80 % க்கும் அதிகமானவை யுபிஐ மூலம் தான் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பின் நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களைத் தீர்க்கலாம். ஆகவே பின் நம்பரை முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி யுபிஐ சேவையில் பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. அதில் மிக முக்கியமானது, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளில், ஒரே நாளில் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பு (Account Balance)பார்வையிட முடியும். அதாவது ஒவ்வொரு யுபிஐ செயலிகளிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








