பேடிஎம் கியூஆர் சேவை.. மார்ச் 15ஆம் தேதி கெடு.. ஆர்பிஐ வெச்ச புது செக்.. என்னென்ன வருது!
பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு புதிய காலக்கெடுவை ஆர்பிஐ (RBI) நிர்ணயித்த அதேநேரத்தில் பேடிஎம் கியூஆர் கோட் (Paytm QR Code), சவுண்ட் பாக்ஸ் (Soundbox) மற்றும் வாலெட் (Wallet) போன்றவற்றுக்கு புதிய செக் வைத்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்கள் வைத்திருக்கும் பேடிஎம் (Paytm) நிறுவனமானது, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதாக கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது. பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையானது, பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று உத்தரவிட்டது. இந்த சூழலில், இந்த காலக்கெடுவை மார்ச் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பேடிஎம் கியூஆர் கோட், பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் மற்றும் பேடிஎம் வாலெட் போன்றவை தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளது.
பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்கள் அவர்களது அக்கவுண்ட்டில் இருக்கும் இருப்பு தொகையை பயன்படுத்தலாம், திரும்பப் பெறலாம் அல்லது மாற்றலாம், டெபிட் கார்டை பயன்படுத்தலாம். மார்ச் 15ஆம் தேதிக்கு அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்ய முடியாது. வட்டி, கேஷ்பேக், ரீஃபண்டுகள் தவிர மற்ற கிரெடிட் மற்றும் டெபாசிட்டுக்கு அனுமதி கிடையாது.
ஆகவே, சம்பளம் உள்ளிட்ட எந்த கிரெடிட்டையும் பெற முடியாது. கஸ்டமர்கள், சிரமத்தைத் தவிர்க்க மார்ச் 15ஆம் தேதிக்கு முன்பே மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. பேடிஎம் பேமெண்ட் பேங்க் இருப்பு தொகையை யுபிஐ (UPI) மூலம் மார்ச் 15ஆம் தேதி வரையில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அதன்பிறகு வேறு வங்கிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு இஎம்ஐ (EMI) பேமெண்டுகளை வேறு வங்கிகளுக்கு மாற்றிகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பேடிஎம் பேமெண்ட் பேங்க் இருப்பு தொகையை மார்ச் 15ஆம் தேதிக்கு பிற ஃபாஸ்டேக்கில் (FASTag) பயன்படுத்த முடியாது.
பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டில் பேடிஎம் கியூஆர் கோட், பேடிஎம் சவுண்ட் பாக்ஸ், பேடிஎம் பிஓஎஸ் (Paytm POS) போன்றவை மூலம் மார்ச் 15ஆம் தேதி வரையில் பணத்தை பெறலாம். அதற்கு பிறகு வேறு வங்கிகளுடன் உங்களது அக்கவுண்ட் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பணத்தை பெற முடியும்.
ஆகவே, இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வேறொரு வங்கி அல்லது வாலெட்டுடன் அக்கவுண்ட்டை இணைத்து, புதிய கிஆர் கோட் பெற்று கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. உங்களது பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கில் இருக்கும் நிலுவை தொகையை பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (Bharat Bill Payment System) மூலமும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
யுபிஐ, ஐஎம்பிஎஸ் மூலம் பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பணத்தை பரிமாற்ற முடியாது. இருப்பினும், நிலுவை தொகை எடுக்க மட்டுமே யுபிஐ, ஐஎம்பிஎஸ் சேவையை பயன்படுத்தலாம். இவ்வாறு பல்வேறு விளக்கங்களை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதனிடையே பேடிஎம் கியூஆர் கோட், சவுண்ட் பாக்ஸ் மற்றும் வாலெட் வேலை செய்யாது என்று செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து, அவற்றின் சேவை மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகும் வழக்கம்போல செயல்படும் என்று பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா ட்வீட் மூலம் உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications