லைசன்ஸை கேன்சல் செய்து RBI அதிரடி.. Paytm UPI ஆப், அக்கவுண்ட், அதில் உள்ள பணம் இனி என்ன ஆகும்?
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வங்கி உரிமத்தை () நேற்று (ஏப்ரல் 24) ரத்து செய்தது. பேடிஎம் வங்கியின் செயல்பாடுகள் ஆனது அதன் டெப்பாசிட்டர்களின் நலன்களுக்கு பாதகமாக இருந்ததாகவும் ஆர்பிஐ கூறியுள்ளது.
இதை தொடர்ந்து பேடிஎம் வங்கியை மூடக் கோரி ஆர்பிஐ ஆனது உயர் நீதிமன்றத்தையும் அணுகும். இந்த திடீர் நடவடிக்கை - பேடிஎம் ஆப் பயனர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உங்களுடைய பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ மற்றும் பேடிஎம் அக்கவுண்ட்டிற்கு இப்போது என்ன நடக்கும்? என்கிற பதிலை பார்பதற்கு முன்னர், ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதை பற்றி பார்த்துவிடலாம்.

ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்? ஆர்பிஐ வங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு வழங்கப்பட்ட பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அது பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று கூறியுள்ளது. இதன் விளைவாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வணிக நேரம் முடிந்ததிலிருந்து இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது
மேலும், வங்கி மூடப்படும்போது அதன் முழு வைப்புத்தொகை பொறுப்பையும் திருப்பி செலுத்த போதுமான பணப்புழக்கம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் உள்ளது என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் அதன் சொந்த நலன்களுக்கும், அதன் வைப்பாளர்களின் நலன்களுக்கும் பாதகமான முறையில் நடத்தப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
"வங்கியின் நிர்வாகத்தின் பொதுவான தன்மையானது, வைப்புதாரர்களின் நலன்களுக்கும் பொது நலனுக்கும் பாதகமாக உள்ளது... வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதால் எந்த பயனும் அல்லது பொது நலனும் ஏற்படாது..." என்று இந்திய ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, 1949-ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் சில விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. மத்திய வங்கியின் (ஆர்பிஐ) படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட், 'வங்கி' வணிகம் அல்லது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்த கூடுதல் வணிகத்தையும் உடனடியாகச்செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சரி இப்போது உங்கள் பேடிஎம் வால்ட், யுபிஐ, அக்கவுண்ட்டிற்கு என்ன நடக்கும்? முதலாவதாக, உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. 'வங்கி மூடப்படும்போது, அதன் முழு வைப்புத்தொகை பொறுப்பையும் திருப்பி செலுத்துவதற்கு போதுமான பணப்புழக்கம் வங்கியிடம் உள்ளது' என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நீங்கள் முன்பை போலவே யுபிஐ, ரீசார்ஜ்கள், மற்றும் பணம் செலுத்துதல்கள் போன்றவற்றுக்கு பேடிஎம் ஆப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (பேடிஎம் ஆப்பை சொந்தமாக கொண்டுள்ள நிறுவனம்), தனது நிறுவன தாக்கல் அறிக்கையில், மார்ச் 31, 2024 அன்றே நெருக்கடியில் உள்ள அந்த நிறுவனத்தில் தனது முதலீட்டை குறைத்துவிட்டதால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் (PPBL) தங்களுக்கு எந்த முதலீடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தனது துணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்த போதிலும், பேடிஎம் ஆப், பேடிஎம் யுபிஐ, பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ், கார்டு மெஷின்ஸ் மற்றும் பேமெண்ட் கேட்வே உள்ளிட்ட அதன் முக்கிய சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்றும் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் கூறியுள்ளது. மேலும் பேடிஎம் கோல்ட் மற்றும் பேடிஎம் மணி உள்ளிட்ட அதன் பரந்த சூழலமைப்பு பாதிக்கப்படாமல், வழக்கம் போல் செயல்படும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications